IPL: ஐபிஎல் தொடரில் இருந்து உம்ரான் மாலிக் நீக்கம்.. KKR அணியில் சேர்க்கப்பட்ட சேத்தன் சக்காரியா
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் 2025 தொடரிலிருந்து முழுவதுமாக விலக்கப்பட்டார். இதை அடுத்து அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
2021 முதல் 2024 வரை உம்ரான் மாலிக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்து இருந்தார். அவர் இந்தியாவிலேயே அதிவேகமாக பந்துவீசி கவனத்தை ஈர்த்தார். அதை அடுத்து அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டதால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது.

2024 ஐபிஎல் தொடரின் போதும் அவருக்கு காயம் காரணமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த நிலையில் அவர் தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 75 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 19 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு 26 வயது ஆகிறது.
சேத்தன் சக்காரியா இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டியிலும், இரண்டு சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவர் இரண்டு சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனுபவ வீரர் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்சியில் விளையாட உள்ளது.
ரஹானே 2024 சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணியை கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி கோப்பை வென்று கொடுத்தார். மேலும், அந்தத் தொடரில் அவர் 9 போட்டிகளில் 469 ரன்கள் அடித்திருந்தார், ஐந்து அரை சதங்களை அடித்திருந்தார், அதிக ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடியிருந்தார். இதை அடுத்து அவருக்கு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications