இவர்தான்யா உண்மையான கேப்டன்.. டக் அவுட்டான உடன் வைபவ் சூர்யவன்ஷி அருகே சென்ற ரோகித் சர்மா!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளைச் சந்தித்து, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இது கடந்த போட்டியில் அவர் அதிரடியாக 35 பந்துகளில் சதம் அடித்திருந்த நிலையில் நிகழ்ந்துள்ளது. அப்போது ரோகித் சர்மா அவர் அருகே சென்று செய்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
14 வயதான வீரர் ஒருவர் ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரில், சர்வதேச அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, ரஷீத் கான் ஆகியோரது பந்துவீச்சில் சரமாரியாக சிக்ஸர்களை விளாசி 35 பந்துகளில் சதம் அடித்தது உலகையே வியக்கச் செய்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.

இதனால், அவர் விளையாடிய அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரை சதம், சதம் என அடிக்காவிட்டாலும், 20-30 ரன்களை அவர் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் வெறும் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல், தீபக் சாகரின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து, அவர் ஏமாற்றத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறி, பெவிலியன் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் அணியின் வீரரான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஓடிச் சென்று அவர் முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இவ்வாறு ஆறுதல் கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. இளம் வீரர்களுக்காக தான் எப்போதும் இருக்கிறேன் என அவர் ஆதரவு அளித்து இருப்பதாக பலரும் ரோகித் செயலை பாராட்டினர்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், "'வைபவ் சூர்யவன்ஷி விரைவில் கற்றுக்கொள்வார். ரோகித் சர்மா அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். ஒவ்வொரு மும்பை இந்தியன்ஸ் வீரரும், வைபவ் சூர்யவன்ஷி அவர்களைக் கடந்து சென்ற போது, அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேசினார்கள். ஒரே நாளில் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது. 14 வயது வீரர் ஒரு போட்டியில் சதம் அடித்தார், ஆனால் இன்று டக் அவுட் ஆகி இருக்கிறார். ஆனால் இதுதான் இந்த விளையாட்டு. இதை அவர் விரைவில் கற்றுக்கொள்வார்'" என்றார்.


Click it and Unblock the Notifications