சென்னை : ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் பதவிக்கு ஆசைப்பட மாட்டார்கள். இந்திய அணியில் இடம் கிடைத்து. அதில் அணியின் வெற்றிக்காக நம்மால் பங்களிப்பை செய்ய முடிகிறது என்ற ஆசையே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தாங்கள் இருக்கும் அணியில் தாங்கள்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது அணியில் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்துகிறது. டெல்லி அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணிக்கு சென்றதும் கேகேஆர் அணியில் இருந்து விலகியதும் இது போல் ஒரு பிரச்சனையின் காரணமாக தான்.

இந்த நிலையில் கேகேஆர் அணியில் புதிய கேப்டனாக ரஹானேவை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில் தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் வெளிப்படையான கருத்தை அறிவித்திருக்கிறார். வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் அணி 23 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறது.
இதனால் அவர்தான் கேப்டனாக போகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் ரகானேவின் பெயரும் அடிபட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் ஐயர், நான் எப்போதுமே ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் என்னை எந்த அணியில் சேர்த்தாலும், அதன் தலைமை பொறுப்பு எனக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
மத்திய பிரதேச அணியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் அணியாக இருந்தாலும் சரி, இல்லை இந்திய கிரிக்கெட் அணியாக இருந்தாலும் சரி. நீங்கள் தலைவனாக இருக்கும்போது உங்களுடைய ஐடியாவை அறிவுரைகளை அணிக்கு சொல்லி வழி நடத்தலாம். இதற்கு கேப்டன் என்ற பதவி தேவையில்லை.
ஆனால் எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக இருக்க நான் எப்போதுமே விரும்புவேன். ஒருவேளை கேகேஆர் போன்ற பெரிய அணியில் எனக்கு கேப்டன் பதவி கிடைத்தால் நிச்சயம் அது எனக்கு மிகப்பெரிய பெருமை தான். ஆனால் எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று பொறுமையாக பார்ப்போம்.
எனக்கு பணத்தை பொருத்தவரையில் கடந்த காலத்தில் இருந்ததற்கும் தற்போது இருந்ததற்கும் மிகப்பெரிய ஏற்றம் கிடைத்திருக்கிறது.
இனி எதிர்காலத்தில் அது என்னவாக மாறப்போகிறது என்றும் எனக்கு தெரியவில்லை. இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஏனென்றால் சமூக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
எனவே ரசிகர்கள் நான் பெற்ற பணத்தைப் பற்றியும் நான் விளையாடும் ஆட்டத்தை பற்றியும் நிச்சயம் பேசுவார்கள்.அதை நான் கண்டிப்பாக கண்டுகொள்ளாமல் செல்லவும் மாட்டேன். எனக்கு ஒரு அணியில் எந்த ரோல் கொடுக்கப்படுகிறதோ, அதனை நான் கண்டிப்பாக என் முழு திறமையை வெளிப்படுத்தி செய்வேன் என்று வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.