மும்பை: 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மகிளா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் பின்னணி குறித்து மும்பை இந்தியன்ஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த அணியில் நடந்த குழப்பங்களுக்கு மார்க் பவுச்சரும் காரணம் என்பதால் அவர் பலிகடா ஆக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
2023 ஐபிஎல் தொடரில் மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் 2017 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மகிளா ஜெயவர்த்தனே சிறப்பாக செயல்பட்டு இருந்தார், மும்பை இந்தியன்ஸ் அணி சர்வதேச அளவில் பல டி20 லீக் தொடர்களில் அணிகளை வைத்து இருந்ததால் அனைத்தையும் சேர்த்து நிர்வகிக்கும் பொறுப்பை ஜெயவர்த்தனேவுக்கு அளித்து இருந்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.

அதன் காரணமாக அவருக்கு பதிலாக மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2023 ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டு இருந்தார். 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. அதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.
அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் மார்க் பவுச்சரின் ஆலோசனையும் இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவின் நியமனம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய அளவில் விரிசல்களை ஏற்படுத்தி விட்டது. 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.
ரோஹித் சர்மா அதன் பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனை தான் நாம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம் என மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மாவை நியமிக்க திட்டங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தற்போதைய இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவை அணியின் கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்த குழப்பங்களுக்கு யாரேனும் ஒருவரை பலிகடா ஆக்கினால் மட்டுமே அணியின் வீரர்கள் ஒரே அணியாக இணைந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தில் தான் மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும், வீரர்களை ஒன்றிணைக்கும் பணியை செய்யவே முன்னாள் பயிற்சியாளர் ஜெயவர்தனேவை மீண்டும் நியமித்து இருக்கிறது மும்பை அணி நிர்வாகம்.
எனவே, இனி மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகிய நான்கு நட்சத்திர வீரர்களும் ஒன்று இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.