2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எத்தனை வீரர்கள் தேவை? 10 அணிகளின் லிஸ்ட்
அபுதாபி: கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் 2026 மினி ஏலம் நாளை (டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெறவுள்ளது. அணிகளின் கையில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், நாளை நடக்கும் ஏலம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம். குறிப்பாக சிஎஸ்கே, மும்பஈ இந்தியன்ஸ் உட்பட 10 ஐபிஎல் அணிகளும் நிரப்ப வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் என்ற பட்டியலையும் பார்க்கலாம்.
நாள்: டிசம்பர் 16, 2025 (நாளை - செவ்வாய்க்கிழமை).
இடம்: எதிஹாட் அரேனா (Etihad Arena), அபுதாபி.
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.
மொத்த வீரர்கள்: 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளனர்.
காலியிடங்கள்: 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 77 இடங்களை நிரப்ப வேண்டும்.
மொத்த பணம்: அனைத்து அணிகளிடமும் சேர்த்து மொத்தம் ரூ.237.55 கோடி கையிருப்பு உள்ளது.

அணிகள் வாரியாகக் காலியிடங்கள்:
ஒவ்வொரு அணியும் நிரப்ப வேண்டிய இடங்களின் விவரம் இதோ:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): 13 இடங்கள் (6 வெளிநாட்டு வீரர்கள்).
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): 10 இடங்கள் (2 வெளிநாட்டு வீரர்கள்).
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 9 இடங்கள் (4 வெளிநாட்டு வீரர்கள்).
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): 9 இடங்கள் (1 வெளிநாட்டு வீரர்).
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC): 8 இடங்கள் (5 வெளிநாட்டு வீரர்கள்).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): 8 இடங்கள் (2 வெளிநாட்டு வீரர்கள்).
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG): 6 இடங்கள் (4 வெளிநாட்டு வீரர்கள்).
குஜராத் டைட்டன்ஸ் (GT): 5 இடங்கள் (4 வெளிநாட்டு வீரர்கள்).
மும்பை இந்தியன்ஸ் (MI): 5 இடங்கள் (1 வெளிநாட்டு வீரர்).
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): 4 இடங்கள் (2 வெளிநாட்டு வீரர்கள்).
வெளிநாட்டு வீரர்களுக்கு சிக்கல்
இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், சக நாட்டு வீரரான மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (ரூ.24.75 கோடி) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்குதான் ஒரு பெரிய 'ட்விஸ்ட்' உள்ளது.
ஐபிஎல்-ன் புதிய "அதிகபட்ச ஊதிய விதி"யின் படி, ஒரு வெளிநாட்டு வீரர் மினி ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு ஏலம் போனாலும், அவருக்குக் கிடைக்கும் சம்பளம் குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும்.
விதிப்படி, கடந்த மெகா ஏலத்தின் அதிகபட்ச விலை (ரிஷப் பண்ட் - ரூ.27 கோடி) அல்லது அணியின் அதிகபட்ச தக்கவைப்புத் தொகை (ரூ.18 கோடி). இதில் எது குறைவோ அதுவே வீரரின் சம்பளமாக நிர்ணயிக்கப்படும். அதன்படி, கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம் போனாலும், அவருக்குச் சம்பளமாக ரூ.18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ளத் தொகையானது அணியின் ஏலத்தொகையில் (Purse) இருந்து கழிக்கப்படும், ஆனால் அது வீரருக்குச் செல்லாது. அது பிசிசிஐ வசம் செல்லும்.
அதிக பணம் வைத்திருப்பது யார்?
இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் ராஜா. அவர்களிடம் அதிகபட்சமாக ரூ.64.3 கோடி உள்ளது. எனவே, வெங்கடேஷ் ஐயர், லியம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்களுக்கு கொல்கத்தா அணி போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications