Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் அதிரடி மாற்றங்கள்.. ஏலத் தொகை உயர்வு, 94 போட்டிகள்.. பிசிசிஐ-ன் முழு பிளான் என்ன?

மும்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஏலத் தொகையை உயர்த்துவது, வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பை முறைப்படுத்துவது மற்றும் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய ஏலத்தொகை 125 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இதில் படிப்படியாக சில மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய கால்பந்து தொடர்கள் அல்லது என்.எஃப்.எல் (அமெரிக்க கால்பந்து - ரக்பி) தொடர்களுடன் ஒப்பிடும்போது ஐபிஎல் வீரர்களின் வருமானம் குறைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும், ஏலத் தொகையை திடீரென பெரிய அளவில் உயர்த்துவதற்கு பதிலாக, அதனை படிப்படியாக உயர்த்தவே பிசிசிஐ விரும்புகிறது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில், "ஏல வரம்பை உயர்த்துவது குறித்து நிச்சயமாக ஆலோசிக்கலாம். ஆனால், இதனை ஒட்டுமொத்த வளர்ச்சி நிலையையும் கருத்தில் கொண்டு அணுக வேண்டும். பல வீரர்கள் ஒரு குறிப்பிட்ட சீசனில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகிறார்கள். ஆனால், அடுத்த சீசனில் அவர்கள் விளையாடுவதே இல்லை. மேலும், பல அணிகள் தங்களின் வீரர்களுக்கு ஒப்பந்தத் தொகையைத் தாண்டி கூடுதல் தொகையையும் வழங்குகின்றன. இது மட்டுமின்றி, வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் ரூபாய் போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது. அத்துடன் விளம்பரங்கள் மூலமும் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI plans IPL auction purse hike and expansion

வெளிநாட்டு வீரர்கள் பிரச்சனை

சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஐபிஎல் சீசனில் வெளிநாட்டு வீரர்களின் வருகை மற்றும் காயம் காரணமாக அவர்கள் விலகியது தொடர்பாக பல அணிகள் கவலை தெரிவித்தன. ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு தொடரிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கும் விதிமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், 2 மாதங்கள் நடைபெறும் இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்வதில் இன்னமும் சவால்கள் நீடிக்கின்றன.

ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடரின் முதல் பாதியில் விளையாடவில்லை. குறிப்பாக, ஸ்டார்க் இல்லாதது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், காயம் இருப்பதாக கூறி ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சாம் கரன், பின்னர் இங்கிலாந்தில் டி20 போட்டியில் விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாராவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மோஹித் பர்மன், வெளிநாட்டு வீரர்களின் வருகையை முறைப்படுத்த பிசிசிஐ மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், இந்த விவகாரம் வீரர்களுக்கும் அந்தந்த அணிகளுக்கும் இடைப்பட்டது என்றும், இதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் பிசிசிஐ கருதுகிறது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "அணிகள் தான் வீரர்களின் பொறுப்பாளர்கள். வீரர்களுடனான புரிந்துணர்வை அணிகளிடமே விட்டுவிடுகிறோம். சில வீரர்கள் தாய்நாட்டிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரை தேர்வு செய்கிறார்கள், சிலர் அப்படியே தலைகீழாக செய்கிறார்கள். காயம் ஏற்பட்டால் தவிர, மற்றபடி எங்கள் விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. ஜோஃப்ரா ஆர்ச்சர் விவகாரத்தில், இங்கிலாந்து வாரியம் அவரது பணிச்சுமையை நிர்வகிக்க விரும்பிய போதும், அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முழு தொடரிலும் விளையாட சம்மதித்தார். சாம் கரன் விவகாரத்தில் அடுத்த சீசனில் என்ன செய்ய வேண்டும் என்பது பஞ்சாப் அணிக்கு தெரியும்" என்று விளக்கமளித்துள்ளார்.

2028 முதல் 94 போட்டிகள் நடக்குமா?

2028 சீசன் முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94 ஆக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு கூடுதல் நாட்கள் தேவைப்படும் என்பதால், ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணையை மாற்றியமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி மே 15-க்குள் தொடரை முடிப்பதே சிறந்த தேர்வாக இருக்கும் என பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். 2026 சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி மே 31 அன்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் பருவமழை தொடங்குவதால், தற்போதைய கால அட்டவணையில் 94 போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை. இதனால், ஐபிஎல் தொடரை இரண்டு பாதிகளாக பிரிக்க வேண்டும் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி மே 15-க்குள் முடிக்க வேண்டும். 94 போட்டிகளை நடத்த இதுவே சிறந்த கால அவகாசமாக இருக்கும்.

IND vs PAK:

IND vs PAK: "யாரிடம் வேண்டுமானாலும் தோற்றுப் போங்கள், ஆனால் பாகிஸ்தானிடம்..".. ஜெமிமா என்ன சொன்னார்?

மேலும், எதிர்காலத்தில் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களின் முக்கியத்துவம் குறித்தும் பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது பெரும்பாலான நாடுகள் தங்களுக்கென சொந்த டி20 லீக் தொடர்களை வைத்துள்ளதால், அவர்கள் இந்தியா உடனான இருதரப்பு தொடர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒளிபரப்பு நிறுவனங்களும் சில இருதரப்பு தொடர்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. ரசிகர்களின் சலிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கால்பந்து உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடப்பதால் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி தொடர்கள் நடத்தப்படுகின்றன என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.

Story first published: Saturday, June 13, 2026, 17:17 [IST]
Other articles published on Jun 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+