கடைசி நேரத்தில் டெல்லி அணியின் முதுகில் குத்திய இங்கிலாந்து வீரர்.. 3 ஆண்டு தடைக்கு வாய்ப்பு
மும்பை: 2026 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பென் டக்கெட் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்கள் மற்றும் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2025 டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2026 ஏலத்தில், 31 வயதான இடதுகை பேட்ஸ்மேன் பென் டக்கெட்டை 2 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி தனது வசமாக்கியது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்காக 5 போட்டிகளிலும் விளையாடிய அவர், 10 இன்னிங்ஸ்களில் வெறும் 202 ரன்களை மட்டுமே எடுத்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், தனது டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மை மீண்டும் மீட்பதற்காகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய பென் டக்கெட், "இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. நான் வராததற்காக டெல்லி அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெல்லி போன்ற சிறப்பான அணி என்னை ஏலத்தில் எடுத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். தற்போது எனக்கு 31 வயதாகிறது. ஐபிஎல் தொடரில் நான் ஒருமுறை கூட விளையாடியதில்லை. ஒருவேளை இந்த விலகலின் மூலம் நான் ஐபிஎல் தொடருக்கே நிரந்தரமாக விடைபெறுகிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு இது சரியான முடிவு என்றே கருதுகிறேன்" என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் புதிய விதிமுறைகளின்படி, ஏலத்தில் விலைபோன ஒரு வெளிநாட்டு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினால், அவருக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க கடுமையான தடை விதிக்கப்படும். அதன்படி, நடப்பு சீசனில் இருந்து விலகிய பென் டக்கெட்டுக்கு, 2027 மற்றும் 2028 ஐபிஎல் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்படும். இதனால் 2029 ஆம் ஆண்டில் மட்டுமே அவர் மீண்டும் பங்கேற்க முடியும்.
கடந்த ஆண்டும் டெல்லி அணியால் 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் அவருக்கு 2028 வரை தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பென் டக்கெட்டுக்கு பதிலாக புதிய மாற்று முன்னணி வீரரை ஒப்பந்தம் செய்ய டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


Click it and Unblock the Notifications