IPL 2026: “சிஎஸ்கே கேப்டன் செய்த இந்த தவறுதான் தோல்விக்கு காரணம்”.. ருதுராஜ் மீது பாய்ந்த பத்ரிநாத்
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த நிலையில் பிளே-ஆப் செல்வது சிக்கலாக மாறி உள்ளது. வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த ஒரு குறிப்பிட்ட முடிவு தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த ஒரு தவறு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சிஎஸ்கே அணியின் நிலை இன்று வேறு விதமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் குமுறுகின்றனர். முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமண்யம் பத்ரிநாத்தும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை, லக்னோ அணி வெறும் 16.4 ஓவர்களில் எட்டிப் பிடித்தது. மிட்செல் மார்ஷின் 90 ரன்கள் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தது. இந்தப் தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி கடைசி 3 போட்டிகளில் வென்று இருந்த வெற்றிப் பாதைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பத்ரிநாத் கடும் விமர்சனம்
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி மற்றும் வீரர் தேர்வைக் கடுமையாகச் சாடியுள்ளார். லக்னோ மைதானம் மெதுவான பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் நிலையில், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அகீல் உசைனை அணியில் சேர்க்காதது "முற்றிலும் அர்த்தமற்றது" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"தவறான வீரர்களைத் தேர்வு செய்து போட்டியைத் தோற்பது சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் ஒரு வாடிக்கையாகிவிட்டது. அகீல் உசைனை இந்தப் பிட்ச்சில் நீக்கியது துளியும் ஏற்க முடியாதது. மற்றொரு வாய்ப்பை சிஎஸ்கே அணி வீணடித்துவிட்டது" என பத்ரிநாத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ருதுராஜின் விளக்கம்
போட்டி முடிந்த உடன் இது போன்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்ததாகவே நாங்கள் கருதினோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தபோது வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடிக்கக் கடினமாக இருந்தது. நாங்கள் 160 அல்லது 170 ரன்களைத் தான் எதிர்பார்த்தோம், ஆனால் 187 ரன்கள் எடுத்தது நல்ல ஸ்கோர் தான். பேட்டிங்கில் எங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்தோம். ஆனால் லக்னோ வீரர்கள் சில அசாதாரணமான ஷாட்களை ஆடி போட்டியைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று தற்காத்துப் பேசினார்.
இக்கட்டான நிலை
தற்போது 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு, இனி வரும் 2 போட்டிகளுமே வாழ்வா-சாவா போராட்டமாக மாறிவிட்டது. ரன் ரேட் குறைவாக இருப்பதால், அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காகவும் சிஎஸ்கே அணி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் ருதுராஜின் இந்த 'அணித் தேர்வு' சர்ச்சை சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
