IPL 2026: ஜடேஜாவை அனுப்பியது எங்க அணி வரலாற்றில் எடுத்த கடினமான முடிவு.. சிஎஸ்கே அணி உருக்கம்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா மற்றும் ஷாம்கரனை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கிவிட்டது.
சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் ஜடேஜா சென்றது சிஎஸ்கே ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் கேஎஸ் விஸ்வநாதன், ஜடேஜா சென்று இருப்பது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதில் ஒரு அணி மாற்றத்தை சந்திப்பது என்பது எப்போதுமே சுலபமான விஷயம் கிடையாது. அதுவும் ஒரு சகாப்தமாக சிஎஸ்கே அணியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் ஜடேஜாவை வேறு அணிக்கு அனுப்புவது என்பது எங்கள் வரலாற்றில் நாங்கள் எடுத்த மிகவும் கடினமான முடிவாக பார்க்கிறோம்.
ஜடேஜா மற்றும் ஷாம்கரன் ஆகியோரிடம் பேசி அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவு தான் இது. சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா படைத்த சாதனைகளும் அவர் ஆற்றிய பங்கையும் நாங்கள் என்றென்றும் நன்றியுடன் நினைத்து இருப்போம். ஜடேஜா மற்றும் ஷாம்கரண் எதிர்காலத்திற்கு நாங்கள் வாழ்த்துகிறோம். இதேபோன்று திறமை வாய்ந்த பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் வரவேற்கிறோம்.
எதிர்காலத்தை மனதில் வைத்து நாங்கள் எடுத்த முடிவு தான் இது என்று அவர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்குள் 2012 ஆம் ஆண்டு வந்த ஜடேஜா தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு வரை விளையாடினார். சிஎஸ்கே அணி தடைப்பட்ட இரண்டு ஆண்டு காலத்தில் மட்டும் அவர் குஜராத் அணிக்காக விளையாடினார். சிஎஸ்கே அணி 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியதற்கு ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியமாகும்.
சிஎஸ்கே அணிக்காக 150 விக்கெட்டுகளுக்கு மேலாகவும், பேட்டிங்கில் 2300 ரன்கள் மேலாகவும் ஜடேஜா அடித்திருக்கிறார். அதேபோன்று ஷாம்கரன் சிஎஸ்கே அணி 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2020, 2021 மற்றும் 2025 ஆகிய மூன்று சீசன்களில் சாம் கரண், சிஎஸ்கே அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 356 ரன்கள், 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
சஞ்சு சாம்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் 4500 ரன்கள் அடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் 5 சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அவர் தலைமை தாங்கி இருக்கிறார். இதில் 2022 ஆம் ஆண்டு சீசனில் அவரது தலைமையில் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை வந்தது.


Click it and Unblock the Notifications