Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: “நெருப்பு பந்தை வீசினால் தான் சிஎஸ்கேவை வீழ்த்த முடியும்”.. தோற்றவுடன் கதறிய ஹர்திக்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்க நெருப்பு பந்துகளைத் தான் வீசியிருக்க வேண்டும் என, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா படுதோல்விக்கு பின் விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இந்த மாபெரும் படுதோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா இப்படி புலம்ப என்ன காரணம்? இந்த போட்டியில் அப்படி என்ன தான் நடந்தது? விரிவாக பார்ப்போம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 44வது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 37 ரன்களும், அதிரடியாக ஆடிய நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இருப்பினும் 10 ஓவர்களுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி ரன் குவிக்க முடியாமல் கடுமையாக திணறியது.

IPL 2026 CSK vs MI Mumbai Indians captain Hardik Pandya Reacts After losing to CSK at Chepauk

குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றமளித்தார். சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை குறைந்த ரன்களில் சுருட்டி அசத்தினர்.

பின்னர் 160 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உர்வில் படேல் 24 ரன்களில் வெளியேறினார். ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ருத்ரதாண்டவம் ஆடினர். பொறுப்புடன் ஆடிய ருதுராஜ் 48 பந்துகளில் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 54 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இதனால் சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

போட்டி முடிந்து இந்த படுதோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகுந்த விரக்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், "இது மட்டுமே எங்களுக்கு மோசமான நாள் அல்ல, இந்த ஐபிஎல் சீசனே எங்களுக்கு மிக மோசமானதாகத் தான் அமைந்துள்ளது. எங்களை விட சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்தோம். ஆனால் 10 ஓவர்களுக்கு பின் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை."

"ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்க நாங்கள் நெருப்பு பந்துகளைத் தான் வீசியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் மிக புத்திசாலித்தனமாக விளையாடி வெற்றியை தட்டிப்பறித்தனர்" என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, May 3, 2026, 0:37 [IST]
Other articles published on May 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+