IPL 2026: சிஎஸ்கே-வின் அறிமுக வீரர் செய்த செயல்.. 2வது ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ்-க்கு பின்னடைவு
சென்னை: ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாக களமிறங்கிய இளம் வீரர் ஒருவர், வாய் பிளக்க வைக்கும் வகையில் ஒரு மிரட்டலான கேட்ச் பிடித்து மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் என இரு சாம்பியன் அணிகளுமே புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளதால், கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியில் சேப்பாக்கத்தில் களமிறங்கின. இந்த முக்கியமான ஆட்டத்தில் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக சிஎஸ்கே அணியில் அறிமுக வீரராக ராமகிருஷ்ணா கோஷ் என்ற இளம் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டார். கடந்த மெகா ஏலத்தில் தனது அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட இவர், தனது முதல் போட்டியிலேயே தரமான சம்பவத்தை செய்து காட்டியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே ஆட்டம் காணும் வகையில் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அன்ஷுல் கம்போஜ் வீசிய பந்தில், மும்பை அணியின் முன்னணி அதிரடி தொடக்க வீரரான வில் ஜாக்ஸ் பந்தை வேகமாக விளாச முற்பட்டார். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த அறிமுக வீரர் ராமகிருஷ்ணா கோஷ் எந்தவித தயக்கமுமின்றி ஒரு சிறுத்தையைப் போல பாய்ந்து, நம்ப முடியாத அளவுக்கு ஒரு அற்புதமான ஸ்டன்னிங் கேட்ச்சை மிக லாவகமாக பிடித்து அசத்தினார்.
இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜாக்ஸ் வெறும் 1 ரன்னில் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். தனது முதல் போட்டியிலேயே இப்படி ஒரு மிரட்டலான பீல்டிங்கை வெளிப்படுத்திய ராமகிருஷ்ணா கோஷை சக வீரர்களும், ஒட்டுமொத்த சேப்பாக்கம் ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டினர்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளுமே தங்களது வழக்கமான அதிரடி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும், மும்பை அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் தத்தளிக்கின்றன. முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று மும்பையை சொந்த மண்ணிலேயே சரணடைய செய்தது.


Click it and Unblock the Notifications
