CSK - குட் நியூஸ்.. 2 இளம் தமிழக வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே நடந்த சோதனை
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பெரும் ஏமாற்றம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்பாகவே அணியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இரண்டு இளம் தமிழக வீரர்களை சென்னைக்கு அழைத்து சோதனை (Trials) நடத்தியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
கடந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சொதப்பிய சிஎஸ்கே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்து விலகியதால் மேலும் பின்னடைவைச் சந்தித்தது. தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றும் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

இந்த மோசமான தோல்வியிலிருந்து மீண்டு வர, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, எதிர்காலத்திற்கான ஒரு வலுவான அணியை கட்டமைக்கும் முயற்சியில் சிஎஸ்கே இறங்கியுள்ளது. சமீபத்தில், இந்திய அண்டர் 19 அணியின் ஆல்-ரவுண்டரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான ஆர்.எஸ். அம்ரிஷ் மற்றும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (TNPL) தொடரில் அசத்திய மற்றொரு தமிழரான வேகப்பந்து வீச்சாளர் இசக்கிமுத்து ஆகியோரை சிஎஸ்கே அணி நிர்வாகம் சோதனைக்காக அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த ஆர்.எஸ். அம்ரிஷ்?
18 வயதே ஆன ஆர்.எஸ். அம்ரிஷ், சிஎஸ்கே அணியில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மத்ரேவின் சக அண்டர் 19 அணி வீரர் ஆவார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 தொடரில் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் இரண்டு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 138 ரன்களும், 6 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 110 ரன்களும், 8 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர், சிவம் துபே பந்துவீசாத குறையை போக்க சரியான தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் இசக்கிமுத்து!
திருநெல்வேலியைச் சேர்ந்த 23 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் இசக்கிமுத்து, கடந்த டிஎன்பிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், தனது அபாரமான வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தத் தொடரில் மொத்தமாக 14 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சேப்பாக்கம் மைதானத்தின் சூழலை நன்கு அறிந்தவர் என்பதால், டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு இவர் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி ஆகியோர் சென்னைக்கு வந்து அணி நிர்வாகத்துடன் அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை பட்டை தீட்டுவதில் பெயர் பெற்ற சிஎஸ்கே, இந்த இரண்டு இளம் தமிழக வீரர்களையும் ஏலத்தில் எடுத்து அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications