IPL 2026: “எல்லை மீறி போறீங்க.. இதோட நிறுத்திக்குங்க”.. இளம் ஐபிஎல் வீரர்களை வறுத்தெடுத்த ஸ்டெய்ன்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் ஒரு புதிய விதமான கொண்டாட்டம் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விக்கெட்டை வீழ்த்திய பின் அல்லது அதிரடியாக ரன் குவித்த பின் வீரர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதக் குறிப்பை எடுத்து கேமரா முன் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆரம்பத்தில் சுவாரசியமாகப் பார்க்கப்பட்ட இந்தச் செயல், தற்போது ஒரு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவானின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. "இத்தோடு இந்த நாடகத்தை நிறுத்துங்கள்" என அவர் வெடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் மின்னல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், இந்த காகிதக் குறிப்பு கொண்டாட்டத்தை கடுமையாகச் சாடியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், சிஎஸ்கே அணிக்கு எதிராக விக்கெட் எடுத்த பின் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காட்டிய உடனேயே ஸ்டெய்ன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "அந்தக் காகிதங்களை அப்புறப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இது ஒன்றும் இப்போது டிரெண்டிங் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், இது எப்போதுமே ரசிக்கும்படியாக இருந்ததில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
தொடங்கியது எப்படி?
இந்த வினோதமான கொண்டாட்டம் கடந்த 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவால் தொடங்கப்பட்டது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகச் சதம் அடித்தபோது "இது ஆரஞ்சு ஆர்மிக்காக" என எழுதப்பட்ட பேப்பரைக் காட்டினார். அதன் தொடர்ச்சியாக, இந்த 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரகு சர்மா தனது முதல் விக்கெட்டை எடுத்தபோது இதைப் பின்பற்றினார்.
சிஎஸ்கே அணியின் உர்வில் படேல், லக்னோவுக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தபோது, "இது உங்களுக்காக அப்பா" என்ற வாசகம் அடங்கிய பேப்பரைக் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், நேற்று லக்னோ வீரர் ஆகாஷ் சிங், சிஎஸ்கேஅணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, "#Akki on fire - டி20 போட்டியில் விக்கெட் எடுப்பது எப்படி என்று ஆகாஷுக்குத் தெரியும்" என்று எழுதப்பட்ட தாளைக் காட்டினார். இது பலருக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.
ஸ்டெய்னின் அதிருப்தி
கிரிக்கெட் என்பது மைதானத்தில் காட்டும் திறமையைப் பொறுத்ததே தவிர, இதுபோன்ற திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களால் அல்ல என்பதே ஸ்டெய்னின் கருத்தாக உள்ளது. விக்கெட்டுகளும் ரன்களும் மட்டுமே ஒரு வீரரை அடையாளப்படுத்தும், காகிதத்தில் எழுதும் வாசகங்கள் அல்ல என அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
