சிஎஸ்கேவில் இருந்து போய் மோசமான ரெக்கார்டு செய்த தீபக் சாஹர்.. மும்பை இந்தியன்ஸ் பின்னடைவு
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் ஆடிய தீபக் சாஹர் கடந்த ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். கடந்த ஆண்டே அவரது செயல்பாடு சராசரியாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் அவர் மோசமான பவுலிங் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் விரும்பாத ஒரு மோசமான சாதனையைப் படைத்து இருக்கிறார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கிய போது, மும்பை அணியின் முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரிலேயே பஞ்சாப் வீரர்கள் ரன் வேட்டையைத் தொடங்கினர். பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரிகளையும், பிரியான்ஷ் ஆர்யா 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியையும் விளாச, அந்த ஒரே ஓவரில் 21 ரன்கள் கசிந்தது.
தேவையற்ற சாதனை
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முதல் ஓவரிலேயே 20 ரன்களுக்கு மேல் கொடுத்த உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற தேவையற்ற சாதனையை தீபக் சாஹர் தன்வசமாக்கியுள்ளார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. ஒரே சீசனில் இரண்டு முறை இவ்வாறு ரன்களை வாரி வழங்கியது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2011-ல் 27 ரன்கள் கொடுத்த அபு நெச்சிம் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹர்பஜன் சிங் (26 ரன்கள்), நிதிஷ் ராணா (26 ரன்கள்) மற்றும் இந்த சீசனில் ஹைதராபாத் வீரர் டேவிட் பெயின் (25 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் தீபக் சாஹர் இணைந்துள்ளார்.
சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணியின் குயின்டன் டி காக் 112 ரன்கள் விளாசி சதம் அடித்தும், அந்த அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்ததால் வெற்றி வாய்ப்பு கைநழுவியது. ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முன்னணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் 31 பந்துகளில் 80 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் குவித்து 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர். மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது தோல்வியாகும். புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கும் மும்பை அணி, இனி வரும் போட்டிகளிலாவது தனது பந்துவீச்சைச் சீரமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications