IPL 2026 Final: ஆர்சிபி - குஜராத் பைனலில் மழை பெய்தால் என்ன நடக்கும்? ரிசர்வ் நாள் இருக்கா?
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 31) நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த முக்கியமான போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு வழங்கப்படும்? என்பது குறித்த ஐபிஎல் நிர்வாகத்தின் விதிகள் இதோ:
கூடுதல் நேரம்:
போட்டி நாளன்று இரவு மழை பெய்து ஆட்டம் தடைபட்டால், உடனடியாகப் போட்டி ரத்து செய்யப்படாது. போட்டியை நடத்தி முடிக்க 120 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழையின் அளவைப் பொறுத்து ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. போட்டி முடிவை அறிவிக்க இரண்டு அணிகளும் தலா 5 ஓவர்களாவது விளையாடி இருக்க வேண்டும்.

ரிசர்வ் டே (Reserve Day):
ஒருவேளை போட்டி நாளன்று ஒரு பந்து கூட வீச முடியாத அளவுக்கு மழை பெய்தால் அல்லது போட்டி தொடங்கி பாதியிலேயே நின்றால், ஆட்டம் ஜூன் 1-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றப்படும். இது 'ரிசர்வ் டே' என அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் எங்கு நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்து திங்கட்கிழமை ஆட்டம் தொடரும்.
லீக் சுற்று புள்ளிப்பட்டியல் முக்கியம்:
மிகவும் அரிதான சூழலில், மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரண்டு நாட்களுமே மழையினால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்க லீக் சுற்று புள்ளிப்பட்டியல் கணக்கில் கொள்ளப்படும். லீக் சுற்றின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. எனவே, மழை காரணமாக இரண்டு நாட்களும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.
வானிலை அறிக்கை:
அகமதாபாத் வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அகமதாபாத்தில் வெப்ப அலை வீசி வருவதால், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், ரசிகர்கள் முழுமையான 20 ஓவர் ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு தனது கோப்பையைத் தக்கவைக்குமா அல்லது குஜராத் தனது சொந்த மண்ணில் மகுடம் சூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
