IPL 2026: மும்பை அணியில் அடுத்தடுத்து குழப்பம்.. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் அணியில் இல்லை
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்து ஏற்கனவே பெரும் சோகத்தில் தவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக அணியுடன் தரம்சாலா செல்லவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளே ஆப் வாய்ப்பு பறிபோன விரக்தியில் இவர்கள் அணியை விட்டு விலகினார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது
2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் பரிதாபமாக காட்சியளிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, தரம்சாலாவில் நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக மும்பை அணியின் மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் அனைவரும் தரம்சாலா சென்றடைந்தனர். ஆனால், இந்த பயணத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.

கடந்த வாரம் ராய்ப்பூரில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பிரச்சனையால் விளையாடவில்லை. தற்போது அவரது உடற்தகுதி குறித்து மும்பையில் உள்ள மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே போட்டிக்கு முன்பாக நேரடியாக தரம்சாலா வருவார் என அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம், ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் அணியை வழிநடத்தி வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் அணியுடன் தரம்சாலா பயணிக்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட அவருக்கு அணி நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போதும், ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவர் ராய்ப்பூர் சென்று அணியுடன் இணைந்தார். அதேபோல இன்றும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு அவர் நேரடியாக மைதானத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயணம் ஆரம்பம் முதலே மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று பிளே ஆப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மும்பை அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.
அடுத்து பஞ்சாப் அணியையும், மே 20 அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியையும், மே 24 அன்று சொந்த மைதானமான வான்கடேயில் ராஜஸ்தான் அணியையும் சந்திக்க உள்ளது. முன்னணி வீரர்களின் தொடர் காயங்களும், கேப்டன்களின் வருகையில் உள்ள இழுபறியும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கோப்பையை வெல்லாவிட்டாலும், எஞ்சியுள்ள போட்டிகளிலாவது மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications
