IPL 2026: “எங்க கிரவுண்டில் மற்ற வீரர்கள் பெயரை சொல்றாங்க”.. தோல்விக்கு பின் கதறிய ஹர்திக் பாண்டியா
மும்பை: வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்து, வரலாற்றுச் சாதனை படைத்த பிறகும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது மனவருத்தத்தையும், பந்துவீச்சாளர்களின் பின்னடைவையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தங்களின் சொந்த மைதானத்தில் எதிரணி வீரர்கள் பெயரை சொல்வதாக ரசிகர்களை சாடினார்.

244 ரன்கள் என்ற பெரிய இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் எட்டியது. இந்த தோல்விக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "இந்தப் போட்டியில் பனிப்பொழிவு ஒரு பெரிய தடையாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஹைதராபாத் அணி வீரர்கள் மிகச்சிறந்த ஷாட்களை விளையாடினார்கள். அதேசமயம் நாங்கள் சில மோசமான பந்துகளை வீசினோம், அது அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மிக வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஆட்டத்தை மீண்டும் எங்கள் பக்கம் கொண்டு வர முயன்றோம், ஆனால் அது போதுமானதாக இல்லை" என்று தெரிவித்தார்.
மும்பை அணியின் பேட்டிங் குறித்துப் பேசிய அவர், "கடந்த சில போட்டிகளை விட இன்று எங்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தது. 244 ரன்கள் என்ற இலக்கை எனது பந்துவீச்சாளர்கள் தற்காத்துக் கொள்வார்கள் என்று நான் முழுமையாக நம்பினேன். ஆனால் இன்று திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை. மைதானத்தில் கேட்ச்களைத் தவறவிடுவது இந்த சீசனில் எங்களுக்குத் தொடர்கதையாகிவிட்டது. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே அதிர்ஷ்டமும், ஆட்டத்தின் போக்கும் மாறும். ஒரு சில வாய்ப்புகளைத் தவறவிடுவது ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடுகிறது" என்றார்.
பந்துவீச்சாளர்களைப் பற்றி பேசிய ஹர்திக், "எங்கள் பந்துவீச்சாளர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஒரு அணியாகச் சேர்ந்து தான் நாங்கள் தோற்றுள்ளோம். மும்பை இந்தியன்ஸ் அணி எதற்கெல்லாம் பெயர் போனதோ, அதை இந்த சீசனில் எங்களால் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். எங்களிடம் சிறந்த உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும் உள்ளனர். எங்குத் தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் வலுவாகத் திரும்புவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக மும்பை ரசிகர்கள் குறித்து ஹர்திக் பாண்டியா ஒரு உருக்கமான கருத்தைப் பகிர்ந்து கொண்டார். "எங்கள் ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் இந்த சீசனில் அதிகம் வழங்கவில்லை. எங்கள் சொந்த மைதானத்தில் எதிரணி வீரர்களின் பெயரை ரசிகர்கள் கோஷமிடும்போது அது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ரசிகர்களின் அன்பையும் நம்பிக்கையையும் மீண்டும் பெறுவதற்கு நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications