IPL 2026: 'டப்பா கேப்டன்சி.. சின்னப்பையனிடம் கடைசி ஓவரா?’.. ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ஸ்ரீகாந்த்
சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி வியூகங்களை 'டப்பா கேப்டன்சி' என பகிரங்கமாக விமர்சித்துள்ள அவர், முக்கிய கட்டங்களில் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பந்துவீச ஹர்திக் பயப்படுகிறார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது மோசமான முடிவுகளால் விமர்சன வலையில் சிக்கியுள்ள ஹர்திக் பாண்டியா மீது ஸ்ரீகாந்த் சரமாரி குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று தவித்து வருகிறது. ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என நட்சத்திர பட்டாளமே அந்த அணியில் அங்கம் வகிக்கிறது. இருப்பினும், களத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறுவதால் அந்த அணி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பரம எதிரியான சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே தனது மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் மோசமான அணுகுமுறையே காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். இர்பான் பதான் உள்ளிட்டோர் பாண்டியாவை தைரியமாக செயல்பட அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்துள்ளார். அவர் கூறுகையில், "உலகக் கோப்பை டி20 தொடரில் கடைசி கட்ட ஓவர்களை அசாதாரணமாக வீசிய ஒரு முன்னணி பந்துவீச்சாளர், தற்போது இங்கு பந்துவீச பயப்படுகிறார். மும்பை அணியின் மிகப்பெரிய பிரச்சனையே இங்கு தான் தொடங்குகிறது. ஹர்திக் பாண்டியா செய்தது ஒரு 'டப்பா கேப்டன்சி'. டாஸ் வென்றதும் அவர் முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை தவிர்த்து, மற்ற அனைத்து போட்டிகளிலும் இலக்கை துரத்தி மும்பை அணி தோல்வியையே சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்திருந்தால் திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன் போல தனி ஒருவராக போராடி அணியை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அதிலும் ஹர்திக் பாண்டியா கோட்டை விட்டுவிட்டார். தனது 2வது போட்டியில் மட்டுமே விளையாடும் கிரிஷ் பகத் என்ற இளம் வீரரிடம் எப்படி டெத் ஓவர்களை கொடுக்க முடியும்? ஹர்திக் பாண்டியா மற்றும் கிரிஷ் பகத் வீசிய 4 ஓவர்களில் 69 ரன்கள் சென்றது தான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது" என்றார்.
"கிரிஷ் பகத் போன்ற அனுபவமில்லாத வீரர்களை போட்டியின் நடு ஓவர்களில் தான் பந்துவீச வைத்திருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை அங்கேயே முடிந்துவிட்டது. தங்களது ஆடும் 11 பேரை எப்படி பயன்படுத்துவது என்றே அந்த அணி நிர்வாகத்திற்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா அதிக ரன்களை வாரி வழங்கும் பவுலராக மாறிவிட்டார். பேட்டிங்கிலும் பந்தை தொடுவதற்கு கூட அவர் திணறி வருகிறார். மொத்தத்தில் ஒரு பேட்ஸ்மேனாக, பவுலராக மற்றும் கேப்டனாக அவர் தனது முழு நம்பிக்கையையும் இழந்துவிட்டார்" என ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications