IPL 2026: முடிவுக்கு வந்த பும்ராவின் காத்திருப்பு.. 114வது பந்தில் கிடைத்த முதல் விக்கெட்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில், மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா,முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க வீரர் சாய் சுதர்சனை கோல்டன் டக்கில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் , தனது முதல் விக்கெட்டுக்கான நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடந்த ஐந்து ஆட்டங்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி வந்த பும்ராவுக்கு இது ஆறுதலாக அமைந்தது. நடப்பு சீசனில் அவருடைய 114வது பந்தில் இந்த விக்கெட்டை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. முதல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில், பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடினார். இவரின் இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது 151வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ள பும்ரா, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணிக்கு முக்கியப் பங்காற்ற வேண்டும். ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்ற மும்பை, இப்போட்டியிலும் தோற்றால் வெளியேற்றத்திற்கு நெருக்கமான நிலைக்குத் தள்ளப்படும்.
அதேவேளையில், இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் இளம் வீரர் திலக் வர்மா அதிரடி சதம் அடித்து அசத்தினார். இடது கை பேட்ஸ்மேனான இவர், குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை எதிர்கொண்டு வெறும் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.
திலக், மும்பை இன்னிங்ஸின் கடைசி பந்தில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்களில், 45 பந்துகளில் சதம் அடித்த இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை அவர் சமன் செய்தார்.
சனத் ஜெயசூர்யா, 2008 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பையின் வான்கடே மைதானத்தில் 45 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் அதிவேக சத சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் (30 பந்துகள்) வைத்துள்ளார். 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கெய்ல் இதை நிகழ்த்தினார்.


Click it and Unblock the Notifications