IPL 2026: "மறைக்க ஒன்றுமே இல்லை" மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் செய்த தவறு.. புலம்பிய ஹர்திக் பாண்டியா
கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவு தொடர்கதையாகி வருகிறது. அது குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புலம்பி இருக்கிறார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே பிளே-ஆப் ரேசில் இருந்து வெளியேறிவிட்ட மும்பை அணி, கௌரவத்திற்காக விளையாடிய இந்தப் போட்டியிலும் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. மணீஷ் பாண்டே மற்றும் ரோவ்மேன் பவல் ஜோடி அமைத்த 64 ரன்கள் கூட்டணி கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தது.

தோல்வி குறித்து ஹர்திக் விளக்கம்
போட்டிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது அணியின் தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பவர்-பிளே ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. நானும் திலக் வர்மாவும் இன்னும் சில ஓவர்கள் நிலைத்து நின்று ஆடியிருந்தால் அல்லது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் 160 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கலாம். அது வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும்" என்றார்.
மோசமான பீல்டிங்
அணியின் பீல்டிங் குறித்து மிகவும் வருத்தத்துடன் பேசிய ஹர்திக், "இந்த சீசன் முழுவதும் எங்களது பீல்டிங் மிகவும் மோசமாகவே இருந்துள்ளது. பல முக்கியமான கேட்சுகளை நாங்கள் தவறவிட்டுள்ளோம். கேட்சுகளைக் கோட்டைவிட்டால் வெற்றி பெறுவது கடினம். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. பாதியளவு வாய்ப்புகளைக் கூடப் பயன்படுத்தத் தவறினால், போட்டியின் போக்கே மாறிவிடும். கேட்சுகளைத் தவறவிடும்போது நாம் எப்போதுமே போட்டியில் பின்தங்கியே இருக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஆடுகளம் குறித்துப் பேசிய அவர், "தற்போது ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக மாறிவிட்டது. பந்துவீச்சாளர்கள் பல நேரங்களில் உதவியற்ற நிலையில் உள்ளனர். ஆனால், இன்று பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. பேட்ஸ்மேன்கள் போராடி ரன் குவிப்பதே உண்மையான கிரிக்கெட். இதுபோன்ற ஆடுகளங்கள் தான் பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார். மும்பை அணியின் இந்தத் தொடர் தோல்விகள் அந்த அணியின் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
