IPL 2026: இந்திய டி20 அணியில் எனக்கு இடமில்லையா? பிசிசிஐ தேர்வுக் குழுவுக்கு பதிலடி கொடுத்த ராகுல்
டெல்லி: பல ஆண்டுகளாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாகவே தரமான பதிலடி கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ள அவர், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு ஒரு அதிரடியான செய்தியையும் சொல்லியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல், தனது மெதுவான பேட்டிங் காரணமாக 2022ம் ஆண்டிற்குப் பிறகு டி20 அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார்.
டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் மிக முக்கியம் என்பதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது ஆட்டத்தின் பாணியை முற்றிலும் மாற்றியுள்ளார். நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் இதுவரை 54 என்ற சராசரி மற்றும் 180க்கும் அதிகமான மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது வென்ற ராகுல், இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை பரிசளிப்பு விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
அதன் பின் இந்த சீசனில் உங்கள் பேட்டிங்கில் எந்த விஷயம் உங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு, சற்றும் தயங்காமல் "எனது ஸ்ட்ரைக் ரேட்" என ராகுல் பதிலளித்தார். "கடந்த சில ஆண்டுகளாக எனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதை மாற்றுவதற்காக நான் பல மாதங்களாக கடுமையாக உழைத்தேன். நவீன டி20 கிரிக்கெட்டிற்கும், எனது அணிக்கும் என்ன தேவையோ அதை தற்போது சிறப்பாக செய்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என அவர் கூறினார்.
ஸ்ட்ரைக் ரேட் காரணமாக தன்னை ஒதுக்கிய விமர்சகர்களுக்கும், தேர்வாளர்களுக்கும் தான் மீண்டும் டி20 அணிக்கு திரும்ப முழுமையாக தயாராகிவிட்டேன் என்பதை ராகுல் தனது பேட்டிங் மூலம் ஆணித்தரமாக உணர்த்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தோல்விகள் குறித்தும் பேசினார் ராகுல்.
"விளையாட்டில் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் ரன்களை விட அணியின் வெற்றி தான் மிக முக்கியம். தொடர் தோல்விகளுக்குப் பிறகு அணியின் ஓய்வறையில் நடந்த வெளிப்படையான விவாதங்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். பெரிய தவறுகள் செய்யாவிட்டாலும், முக்கியமான தருணங்களை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்தோம். டி20 கிரிக்கெட் இரண்டாவது வாய்ப்பை தராது என்பதால், அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினோம்" என தெரிவித்தார் ராகுல்.


Click it and Unblock the Notifications
