“இந்த 2 ஐபிஎல் டீம் ஆடுறது போர் அடிக்குது.. சிஎஸ்கே ஆடுறது..”.. பாலிவுட் இயக்குனர் விமர்சனம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பத்து அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடி முடித்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெற்றிகரமாக இந்த சீசனைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் குணால் கோலி ஐபிஎல் அணிகள் குறித்து தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரிலேயே மிகவும் சலிப்பை ஏற்படுத்தும் அணிகள் என்று அவர் விமர்சித்துள்ளார்.
புதன்கிழமை இரவு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு சுருண்டது. டெல்லி அணி தொடக்கத்தில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், பின்னர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தை பார்த்த பிறகுதான் குணால் கோலி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, "லக்னோ மற்றும் டெல்லி அணிகளில் எனக்கு பிடித்த வீரர்கள் சிலர் இருந்தாலும், இந்த 2 அணிகளும் மிகவும் போரடிக்கும் அணிகள் தான். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு பலமான போட்டியாளர். எனக்கு எப்போதும் பிடித்த எம்.எஸ் தோனி இல்லாத சிஎஸ்கே போர் தான். தோனி இருந்தால் அவர் வலைப்பயிற்சி செய்வதை கூட நான் ஆர்வமாக பார்ப்பேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கு எப்போதும் பிடித்த அணிகளாக ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் இருப்பதாக கூறிய அவர், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் பிடிக்கத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு அந்த அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு சீசனில் டெல்லி அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் லுங்கி நிகிடி மற்றும் தமிழக வீரர் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். டெல்லி அணி ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அதிரடி ஆட்டம் டெல்லி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த அணிகளின் ஆட்டம் சுவாரஸ்யமாக இல்லை என்பதே குணால் கோலியின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications