IPL 2026: மும்பை இந்தியன்ஸ்-இன் 17 ஆண்டுகால சாதனையை முடிவுக்குக் கொண்டுவந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் 17 சீசன்களாக ஒரு அணிக்கு இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத சாதனை, ஒரே ஒரு இரவில் தவிடுபொடியானது. மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் அந்தப் போட்டியில் வெற்றி நிச்சயம் என்ற எழுதப்படாத விதியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மாற்றி எழுதியது, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 41-வது லீக் போட்டியில், மும்பை அணி நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஹைதராபாத் அணி மிக அசாதாரணமாக எட்டிப்பிடித்து புதிய சரித்திரம் படைத்தது.
ஐபிஎல் தொடரின் முதல் 17 சீசன்களில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், அந்தப் போட்டியில் ஒருமுறை கூட தோற்றதில்லை. இந்த சாதனையை முதன்முதலில் 2025-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி உடைத்தது. தற்போது 2026 சீசனில், ஹைதராபாத் அணி 2-வது முறையாக மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே நிலைகுலைக்கச் செய்துள்ளது. இதன் மூலம் மும்பைக்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட ரன்களைத் துரத்திப் பிடித்த உலகின் 2-வது அணி என்ற பெருமையை ஹைதராபாத் பெற்றது.

முதலில் ஆடிய மும்பை அணி, ரையான் ரிக்கல்டனின் அதிரடி சதத்தால் (123 ரன்கள்) 243 ரன்களைக் குவித்தது. ஆனால், இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் காட்டிய அதிரடி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைச் சிதறடித்தது. டிராவிஸ் ஹெட் வெறும் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 மெகா சிக்ஸர்களுடன் 76 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசன், மைதானத்தின் நாலாபுறமும் பந்தைச் சிதறவிட்டு 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் இது 4-வது மிகப்பெரிய வெற்றிகரமான ரன் சேஸ் ஆகும். இதற்கு முன்னதாக ஏப்ரல் 25, 2026 அன்று டெல்லி அணிக்கு எதிராக 265 ரன்களைத் துரத்திப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
அதேசமயம், மும்பை அணி 8 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்து 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 17 ஆண்டுகால கௌரவத்தை மும்பை அணி தனது கோட்டையிலேயே பறிகொடுத்தது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத் வீரர்களின் இந்த அதிரடி ஆட்டம் இந்த சீசனின் மிகச்சிறந்த இன்னிங்ஸாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications