வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தானை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வார்.. முன்னாள் செலக்டர் சூசகம்
மும்பை: சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து மிரட்டினார். குறிப்பாக உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவின் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்களை பறக்கவிட்டார். இந்த ஒற்றை இன்னிங்ஸ் மூலம் அவரது மார்க்கெட் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுவது உறுதி என கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
கடந்த 2025 மெகா ஏலத்தில் இவரை 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. திறமையான இளம் வீரர்களை கண்டறிவதில் ராஜஸ்தான் அணி எப்போதும் கில்லாடி. சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் வரிசையில் தற்போது சூர்யவன்ஷியும் இணைந்துள்ளார். அதேசமயம் ஜோஸ் பட்லர் போன்ற முக்கிய வீரர்களை கோட்டை விடுவதிலும் அந்த அணிக்கு சரித்திரம் உண்டு. இதனை பயன்படுத்தி, நட்சத்திர வீரர்களை வளைத்துப்போடும் மும்பை இந்தியன்ஸ் அணி விரைவில் சூர்யவன்ஷியை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் ஜதீன் பரஞ்சபே கூட, சூர்யவன்ஷி எதிர்காலத்தில் மும்பை அணிக்காகவே விளையாடுவார் என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தன்பக்கம் இழுத்ததை போல, ஐபிஎல் தொடரில் எதுவும் நடக்கலாம். ஒருவேளை சூர்யவன்ஷி இப்போது ஏலத்திற்கு வந்தால் ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 30 கோடி ரூபாய் வரை விலைபோக வாய்ப்புள்ளது.
தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது ஆவதால் பிசிசிஐ விதிகளின்படி இந்திய சீனியர் அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா என அனைத்து நாடுகளிலும் இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர்களில் சதம் விளாசியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையையும் வென்றுள்ளார்.
விரைவில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்திய அணியில் அவர் இடம்பிடித்தவுடன், அவரை தங்கள் பக்கம் இழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி இப்போதே காத்திருக்கிறது. 2027 மெகா ஏலத்திலோ அல்லது டிரேடிங் முறையிலோ இந்த மிகப்பெரிய மாற்றம் நிகழலாம்.


Click it and Unblock the Notifications