IPL 2026: கருப்பு பட்டை அணிந்து விளையாட வந்த மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி வீரர்கள்.. காரணம் என்ன?
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில்இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்தனர்.
இந்திய இசை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஆஷா போஸ்லே வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு 92 வயது ஆகிறது. இந்தத் தகவல் வெளியானதும் ஒட்டுமொத்த திரை உலகமும் சோகத்தில் மூழ்கியது. மும்பையில் போட்டி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு மைதானத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

டாஸ் போட வந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆகியோர் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஆஷா போஸ்லேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மைதானத்தில் திரண்டிருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சச்சின் - கோலி இரங்கல்:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், "இந்தியாவுக்கும் இசை ரசிகர்களுக்கும் இன்று மிகவும் சோகமான நாள். எங்களுக்கு ஆஷா தாய் ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். இதயம் கனக்கிறது, வார்த்தைகளால் இந்த இழப்பை விவரிக்க முடியாது. அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் அவர் என்றும் வாழ்வார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆஷா போஸ்லே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். உங்களது குரல் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டது, அது என்றும் எங்கள் இதயங்களில் வாழும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இசைத் துறையில் ஆஷா போஸ்லேயின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது மறைவு ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. இவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஏப்ரல் 13) திங்கட்கிழமை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
போட்டியின் நிலவரப்படி, மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செய்யும் விதமாக வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications