IPL 2026: மும்பை அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் மாற்றம்.. வசீம் ஜாபர் சொன்ன பதில்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீசன் முடிந்த பிறகே அணி நிர்வாகம் ஹர்திக்கின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த சீசனில் எம்ஐ அணியின் எதிர்பார்த்திராத ஆட்டம் ஹர்திக்கின் தலைமைத்துவத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
முதுகுத்தசை பிடிப்பு காரணமாக, மே 4 திங்கட்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான போட்டியில் 32 வயதான ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. அணியின் மோசமான செயல்பாட்டிற்கு ஹர்திக் மட்டுமே பொறுப்பல்ல என்று ஜாஃபர் தனது யூடியூப் வீடியோவில் வலியுறுத்தினார். சீசனுக்கு மத்தியில் கேப்டனை மாற்றுவது குறித்த கேள்விக்கு, "அனைத்து முடிவுகளும் போட்டித் தொடர் முடிந்த பிறகே எடுக்கப்படும். தொடரின் இடையில் யாரும் இதைப்பற்றி யோசிப்பதில்லை," என்று பதிலளித்தார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியின் வாய்ப்புகள் கணித ரீதியாக மட்டுமே உயிருடன் உள்ளன. அவர்களும் கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்கள் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. ஹர்திக் பாண்டியா காரணமாகவே அணி மோசமாக விளையாடியது என்று கூறமுடியாது. தனிப்பட்ட வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. காயங்களும் ஒரு முக்கிய காரணம். ரோஹித், ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், டிரெண்ட் போல்ட் போன்றோர் ஃபார்ம் இன்றி தடுமாறினர்," என்று விளக்கினார்.
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் எம்ஐ அணியை LSG-க்கு எதிராக வழிநடத்தினார். இந்தப் போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஒரு முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது. 229 ரன் இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வெற்றிகரமாக துரத்திய அணி என்ற சாதனையைப் படைத்தது.
எம்ஐ விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரியான் ரிகெல்டன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்காக ஹர்திக் பாண்டியா அணியுடன் ராய்ப்பூர் செல்வார் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். இருப்பினும், காயத்தின் தீவிரம் குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய ரிகெல்டன் "ஹர்திக் எப்போது திரும்புவார் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று மதியம் தான் அவருக்கு முதுகுத்தசை பிடிப்பு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவந்தது."
"காயத்தின் அளவு அல்லது அது எவ்வளவு மோசமானது என்று தெரியவில்லை. அவர் எப்படி உணர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த வாரம் ராய்ப்பூர் செல்லும் போது அவர் மீண்டும் எங்களுடன் இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்."தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மே 10 ஞாயிற்றுக்கிழமை அன்று ராய்ப்பூரில் RCB அணியை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications