IPL 2026: 8 சிக்ஸ், 300 ஸ்ட்ரைக் ரேட்.. பூரன் மரண அடி.. மார்ஷ் அதிரடி துவக்கம்.. LSG மெகா ஸ்கோர்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 228 ரன்களைக் குவித்தது. குறிப்பாக நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தீபக் சாஹர் கூட இன்றைய ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணியின் இன்னிங்ஸ் தொடக்கம் முதலே அனல் பறந்தது. தொடக்க வீரராகக் களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அதிரடியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஆனால், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது நிக்கோலஸ் பூரன் தான்.
மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்துகளைச் சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட அவர், வெறும் 21 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசி 63 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆகும். இவருக்குப் பின்னால் வந்த ஹிம்மத் சிங் 31 பந்துகளில் 40 ரன்களும், ஐடன் மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர். பவர் பிளே ஓவர்களில் மட்டும் லக்னோ அணி 90 ரன்களைக் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணியை நிலைகுலையச் செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக அமைந்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 45 ரன்களை வாரி வழங்கினார். அவரது பந்துவீச்சில் வழக்கமாக இருக்கும் துல்லியம் அவரிடம் இல்லை. 3 நோ-பால் மற்றும் 3 வைட் பந்துகளை அவர் வீசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
அனுபவ வீரர் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தார். சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் அல்லாஹ் கஜினஃபர் ஒரு விக்கெட் எடுத்தாலும், 4 ஓவர்களில் 50 ரன்களைக் கொடுத்து ஏமாற்றினார். மும்பை தரப்பில் கார்பின் போஷ் மட்டுமே ஓரளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications