IPL 2026: விராட் கோலி, ராகுலுக்கு சிறந்த ஐபிஎல் அணியில் இடம் இல்லை.. பத்ரிநாத் சொன்ன காரணம்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரமுமான சுப்பிரமணியம் பத்ரிநாத் தனது 'சிறந்த 12' வீரர்கள் கொண்ட கனவு அணியை வெளியிட்டுள்ளார். இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள இந்த அணியில், விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் போன்ற ஜாம்பவான்களுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்ரிநாத் தனது அணியின் தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் குஜராத் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் சூர்யவன்ஷி ஏற்படுத்திய தாக்கம் கோலியை விட அதிகமாக இருந்ததாக அவர் கூறி உள்ளார். மூன்றாவது இடத்தில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சனை அவர் வைத்துள்ளார். நான்காவது இடத்தில் அதிரடி மன்னன் ஹென்ரிச் கிளாசனுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதாரை அணியின் ஃபினிஷராக அவர் களம் இறக்கியுள்ளார். 183.64 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய படிதாரே இந்த சீசனின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர் என பத்ரிநாத் பாராட்டி கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக கொல்கத்தாவின் சுனில் நரைன் மற்றும் பெங்களூருவின் க்ருணால் பாண்டியா ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் இருவரும் முறையே 15 மற்றும் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
பந்துவீச்சில் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் (24 விக்கெட்டுகள்), ஜோப்ரா ஆர்ச்சர் (21 விக்கெட்டுகள்) மற்றும் ககிசோ ரபாடா (21 விக்கெட்டுகள்) ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக பிரின்ஸ் யாதவ் அல்லது கார்த்திக் தியாகி ஆகியோரில் ஒருவரை பத்ரிநாத் பரிந்துரைத்துள்ளார். அணியின் 'இம்பாக்ட் பிளேயராக' சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில் விராட் கோலி 557 ரன்கள் குவித்திருந்தாலும், தற்போதைய ஃபார்ம் மற்றும் அணியின் தேவைக்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்துள்ளதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார். 19 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கானுக்கு இடம் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது. பத்ரிநாத்தின் இந்தத் தேர்வு ஐபிஎல் தொடரில் ஏற்பட்டுள்ள இளம் வீரர்களின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
பத்ரிநாத்தின் ஐபிஎல் 2026 கனவு அணி:
வைபவ் சூர்யவன்ஷி, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹென்ரிச் கிளாசென், ரஜத் படிதார், க்ருனால் பாண்டியா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஜோஃப்ரா ஆர்ச்சர், ககிசோ ரபாடா, பிரின்ஸ் யாதவ் / கார்த்திக் தியாகி.
இம்பாக்ட் சப்: அகீல் ஹொசைன்


Click it and Unblock the Notifications