IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் செய்த இமாலய சாதனை.. தோனி, ரோஹித் வரிசையில் 5-வது கேப்டனாக இணைந்தார்
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் தோனி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள சாதனைப் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு, இது கேப்டனாக 100-வது போட்டியாகும். 31 வயதான ஸ்ரேயாஸ் ஐயர், இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தற்போது பஞ்சாப் கிங்ஸ் என 3 வெவ்வேறு அணிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

ஜாம்பவான்கள் பட்டியல்
ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் சிஎஸ்கே ஜாம்பவான் எம்.எஸ்.தோனி 235 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா (158 போட்டிகள்), விராட் கோலி (143 போட்டிகள்) மற்றும் கௌதம் கம்பீர் (129 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். தற்போது 100 போட்டிகளுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் பட்டியலில் 5-வது வீரராக இணைந்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் பயணம்
கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியை 41 போட்டிகளில் வழிநடத்தினார். பின்னர் 2022 முதல் 2024 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 29 போட்டிகளில் செயல்பட்டார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது 30-வது போட்டியில் விளையாடி இருக்கிறார்.
தனித்துவமான சாதனை
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் மற்றொரு அபூர்வ சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் இவர் தான். இவரது தலைமையின் கீழ் டெல்லி கேப்பிடல்ஸ் (2020) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (2025) அணிகள் இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தன. கடந்த 2024-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
பேட்டிங்கில் மைல்கல்
ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து இதுவரை 2994 ரன்கள் குவித்துள்ள அவர், இன்னும் 6 ரன்கள் எடுத்தால் கேப்டனாக 3000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் இணைவார். இதுவரை 100 போட்டிகளில் கேப்டனாக இருந்து 54 வெற்றிகளையும், 40 தோல்விகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
