IPL 2026: மரண மாஸ் சதம்.. பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சர் ஆக்கிய டி காக்.. 195 ரன்கள் குவிப்பு
மும்பை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக விளையாடி 195 ரன்கள் குவித்துள்ளது. காயத்தால் விலகிய ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக களம் இறங்கிய குயின்டன் டி காக், அபாரமான சதம் விளாசி வான்கடே மைதானத்தை அதிர வைத்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரையான் ரிக்கெல்டன் களம் இறங்கினர். ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே மும்பைக்கு இரட்டை அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ரிக்கெல்டன் (2) ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் 'கோல்டன் டக்' ஆகி வெளியேறினார்.

மீட்டெடுத்த டி காக் - நமன் தீர் ஜோடி
12 ரன்களுக்கே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறிய போது, நமன் தீர் ஜோடி சேர்ந்தார். அங்கிருந்துதான் டி காக் தனது 'மரண மாஸ்' ஆட்டத்தைத் தொடங்கினார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த இந்த ஜோடி, 3-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நமன் தீர் 31 பந்துகளில் 50 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
டி காக் ருத்ரதாண்டவம்
மறுபுறம் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடிய குயின்டன் டி காக், சிக்சர் மழையைப் பொழிந்தார். வெறும் 60 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்த அவர், 112 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 7 இமாலய சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 ரன்களும், திலக் வர்மா 8 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
அர்ஷ்தீப் அபாரம்
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 3 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். மார்கோ ஜான்சன் மற்றும் ஷஷாங்க் சிங் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ரோஹித் சர்மா இல்லாத குறையைத் தனது அதிரடி சதத்தின் மூலம் டி காக் நிவர்த்தி செய்துள்ளார். அடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி ஆடியது.


Click it and Unblock the Notifications