IPL 2026: தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த விராட் கோலி... ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொடாத புதிய உச்சம்
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு ஜாம்பவானும் எட்டாத ஒரு மாபெரும் இமாலய சாதனையை படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் விராட் கோலி. மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 57வது லீக் போட்டி, விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் ஒரு பொன்னான நாளாக அமைந்துள்ளது. இது ஐபிஎல் தொடரில் கோலி விளையாடும் 279வது போட்டியாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன் தலா 278 போட்டிகளுடன் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். அந்த சாதனையை கோலி உடைத்துள்ளார்.

தோனி தனது 278 போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 அணிகளுக்காகவும், ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 265 போட்டிகளுடனும், தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆனால் விராட் கோலி மட்டுமே பெங்களூரு அணிக்காக தனது முழு விசுவாசத்தையும் காட்டி வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் தற்போது 2026ம் ஆண்டு வரை தொடர்ந்து 19 சீசன்களாக பெங்களூரு அணிக்காக மட்டுமே கோலி விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் அனைத்து போட்டிகளையும் ஒரே அணிக்காக விளையாடிய உலகின் ஒரே வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும். ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் கோலி 279 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் 199 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார்.
இந்த மாபெரும் சாதனை ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 427 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் கடந்து 105 ரன்கள் குவித்ததை அடுத்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சரித்திரத்தையும் படைத்தார்.


Click it and Unblock the Notifications