IPL 2026: 18 ஆண்டு சாதனை காலி.. மும்பை இந்தியன்ஸ் வீரர் ரிக்கல்டன் அதிரடி செஞ்சுரி.. சிதறிய SRH
மும்பை: வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 41-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரையான் ரிக்கல்டன் ஆடிய ஆட்டம், புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையை, முறியடித்து அசத்தி உள்ளார்.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவருடன் இணைந்த ரையான் ரிக்கல்டன், ஆரம்பம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ரிக்கல்டன், வெறும் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 8 மெகா சிக்ஸர்களும் அடங்கும்.

இந்த அதிரடியின் மூலம், ஐபிஎல் வரலாற்றின் முதல் சீசனில் (2008) சிஎஸ்கே அணிக்கு எதிராக சனத் ஜெயசூர்யா இதே மைதானத்தில் எடுத்த 114 ரன்கள் என்ற சாதனையை ரிக்கல்டன் முறியடித்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், நடப்பு சீசனில் குயிண்டன் டி காக்கை தொடர்ந்து, மும்பை அணிக்காக சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைக் குவித்து மிரட்டியது. நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். நமன் திர் 22 ரன்களும், திலக் வர்மா ஒரு சிக்ஸருடன் 7 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
ஹைதராபாத் தரப்பில் பிரபுல் ஹிங்கே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். ஹர்ஷ் துபே 3 ஓவர்களிலேயே 50 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஈஷன் மலிங்கா மட்டுமே 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.


Click it and Unblock the Notifications