IPL 2026: நான் நேரில் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச் இது.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு சச்சின் புகழாரம்
மும்பை: ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்த பவுண்டரி லைன் கேட்ச்சை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவை வீழ்த்த ஐயர் பிடித்த இக்கேட்ச், தான் நேரில் பார்த்த சிறந்த கேட்ச்களில் ஒன்று என சச்சின் குறிப்பிட்டார். இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த பீல்டிங் முயற்சி ஐபிஎல் வரலாற்றின் சிறந்த தருணங்களில் ஒன்றாக அமைந்தது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளப் பதிவில், இக்கேட்ச் வெறும் உடல் திறமைக்கு அப்பால், அபாரமான சூழ்நிலையறிதலைக் கொண்டது எனக் குறிப்பிட்டு, விரிவாகப் பாராட்டினார்.

அவர் தனது பதிவில், "ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த கேட்ச் வெறும் உடல் திறமைக்கு அப்பால், அபாரமான சூழ்நிலை அறிதலைக் கொண்டது. பந்தின் வேகம், உயரம், எல்லைக்கோட்டின் தூரம், காலைப் பதிக்காத சரியான முறையில் ஜம்ப் செய்தது என அனைத்தையும் கணக்கிட்டார். காற்றில் இருந்தவாறே பந்தைப் பிடித்து, தரையில் இறங்கும்முன் அருகில் உள்ள வீரரிடம் வீசினார். இவையனைத்தையும் நொடிப்பொழுதில் செய்ய, அளப்பரிய விழிப்புணர்வு, துல்லியம், உடல் வலிமை, மன அமைதி தேவை.
ஐயர் அனைத்தையும் கச்சிதமாகச் செய்தார். நான் நேரில் கண்ட தலைசிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று!" எனப் பகிர்ந்திருந்தார்.ஆட்டத்தின் 18வது ஓவரில் மார்கோ ஜான்சனின் பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிக்க முயன்றார். அப்போது பந்து எல்லைக்கோட்டைத் தாண்டாமல் மிக உயரமாகப் பறந்து லாங் ஆன் திசைக்குச் சென்றது. அங்கே நின்றிருந்த ஐயர், பந்து வரும் திசையை நோக்கி மின்னல் வேகத்தில் இடதுபுறம் ஓடினார்.
எல்லைக்கோட்டின் அருகே தடுமாறிய நிலையிலும் குதித்து, பந்தைப் பிடித்தார். அதை உடனடியாக அருகில் இருந்த சக வீரர் சாவியர் பார்ட்லெட்டிடம் தட்டிவிட்டு, அவர் கேட்ச்சை நிறைவு செய்தார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இக்காட்சியைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிர்ச்சியடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஹர்திக்கின் விக்கெட், மும்பை அணியின் கடைசி நேர கம்பேக்கை தடுத்து, ஆட்டத்தின் போக்கையே முழுவதுமாக மாற்றியது. பஞ்சாப் கிங்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு, தனது கேட்ச் குறித்தும், ஆட்டத்தின் திருப்புமுனை குறித்தும் ஸ்ரேயாஸ் ஐயர் வேடிக்கையாக, இது "என் கேட்ச்தான்" என்று குறிப்பிட்டார். யாரும் என்னை பாராட்டாததால், என்னை நானே பாராட்டி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications