IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் இப்படியொரு விசித்திரம் நடந்ததே இல்லை.. ஷர்துல் தாக்கூருக்கு நேர்ந்த கதி
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வரும் தோல்விகள் ஒருபுறம் இருக்க, அந்த அணி எடுத்த ஒரு விசித்திரமான முடிவு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் குவித்தும் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் மும்பை அணி தனது 'இம்பாக்ட் பிளேயர்' வாய்ப்பைப் பயன்படுத்தி ஷர்துல் தாக்கூரை களமிறக்கியது. ஆனால், அவர் களத்திற்கு வந்தும் ஒரு பந்து கூட வீசவில்லை, ஒரு பந்தை கூட எதிர்கொள்ளவில்லை. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு 'இம்பாக்ட் பிளேயர்' எவ்வித பங்களிப்பும் இல்லாமல் போனது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனப் கூறப்படுகிறது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ரையான் ரிக்கல்டனின் அபாரமான 123 ரன்கள் உதவியுடன் மும்பை 20 ஓவர்களில் 243 ரன்களைக் குவித்தது. பின்னர் 244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி விளையாடிய போது, 7-வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றத்தைச் செய்தது. விக்கெட் கீப்பர் ராபின் மின்ஸை வெளியேற்றிவிட்டு, பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் ஷர்துல் தாக்கூரை 'இம்பாக்ட் பிளேயராக' ஹர்திக் பாண்டியா கொண்டு வந்தார்.

வழக்கமாக ஒரு பந்துவீச்சாளரை இம்பாக்ட் பிளேயராகக் கொண்டு வரும்போது, அவர் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஓவர்களையாவது வீசுவார். ஆனால், ஹைதராபாத் பேட்டர்கள் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்த நிலையிலும், ஷர்துல் தாக்கூருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா உட்பட 6 பந்துவீச்சாளர்களை மும்பை பயன்படுத்தியது. ஆனால் ஷர்துல் தாக்கூர் இறுதிவரை மைதானத்தில் ஒரு பார்வையாளராகவே நின்று கொண்டிருந்தார். மும்பை அணி பேட்டிங் செய்து முடித்த பிறகு அவர் களமிறக்கப்பட்டதால் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்த வினோதமான நிகழ்வை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். "ஷர்துல் தாக்கூர் இம்பாக்ட் பிளேயராக வரவில்லை, ஆட்டத்தை மைதானத்திற்குள் இருந்து வேடிக்கை பார்க்கவே வந்துள்ளார்" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "பெரியவர்களுடன் விளையாடச் செல்லும் சிறுவன் பந்தை மட்டும் எடுத்துக் கொடுப்பதைப் போல ஷர்துல் தாக்கூர் இருந்தார்" என கிண்டல் செய்துள்ளார் "இம்பாக்ட் இல்லாத இம்பாக்ட் பிளேயர்" என்ற பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இந்த 'இம்பாக்ட் பிளேயர்' விதிமுறை ஏற்கனவே பலத்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்களே, இந்த விதியால் ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஷர்துல் தாக்கூர் போன்ற ஒரு அனுபவ வீரரை களமிறக்கிவிட்டு, அவரைப் பயன்படுத்தாமல் போனது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நிர்வாகத்தின் திட்டமிடல் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதையே காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை அணிக்கு, இத்தகைய சொதப்பலான முடிவுகள் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications