IPL 2026: சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் வீசிய பந்தால் பறந்த ரூ.28000 வாட்ச்.. துடித்துப் போன திலக் வர்மா
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு மைதானத்திலேயே ஒரு எதிர்பாராத சம்பவம் காத்திருந்தது. அவர் சிக்ஸர் அடிக்க முயன்றபோது அவரது கையில் இருந்த விலை உயர்ந்த வாட்ச் கழன்று கீழே விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 12-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வீசிய பந்து திலக் வர்மாவின் மணிக்கட்டில் பட்ட வேகத்தில், அவர் அணிந்திருந்த வாட்ச் கழன்று மைதானத்தில் தெறித்து விழுந்தது.

இதனால் நிலைதடுமாறிய திலக் வர்மா, வலியால் துடித்தார். உடனடியாக மும்பை அணியின் மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர் அணிந்திருந்தது சாதாரண வாட்ச் அல்ல, அது 'WHOOP' எனப்படும் வீரர்களின் உடற்திறனை கண்காணிக்கும் நவீன பிட்னஸ் பேண்ட் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் 28,000 ரூபாய் ஆகும். நல்லவேளையாக பந்து பட்ட வேகத்திலும், கீழே விழுந்தபோதும் அந்த விலை உயர்ந்த வாட்ச் உடையவில்லை. சிறிது நேர சிகிச்சைக்குப் பிறகு திலக் வர்மா மீண்டும் அதே வாட்ச்சை அணிந்துகொண்டு விளையாடினார்.
இருப்பினும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு திலக் வர்மாவால் அதிக நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர், அடுத்த 2 பந்துகளிலேயே வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. நமன் திர் 57 ரன்கள் குவித்து ஓரளவுக்கு அணியைக் காப்பாற்றினார்.
160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், இளம் வீரர் கார்த்திக் சர்மா 54 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது இந்த சீசனில் கிடைத்த 7-வது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications