IPL 2026: மிரள வைத்த திலக் வர்மா.. 23 பந்தில் 83 ரன்.. முதல் செஞ்சுரி.. துள்ளிக் குதித்த பாண்டியா
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் லீக் போட்டியில், ஒரு கட்டத்தில் 22 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்துத் திக்கித் திணறிக் கொண்டிருந்த திலக் வர்மா, அடுத்த 23 பந்துகளில் 82 ரன்களை விளாசித் தள்ளி மிரள வைத்தார். 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
காகிசோ ரபாடா வீசிய புயல் வேகப் பந்துவீச்சில் மும்பை அணியின் முன்னணி வீரர்கள் வரிசையாகச் சரிந்தனர். டேனிஷ் மலேவர் (2), குயின்டன் டி காக் (13), மற்றும் சூர்யகுமார் யாதவ் (15) ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே வெளியேறினர். 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது.

மீட்டெடுத்த திலக் - நமன் தீர் ஜோடி
இந்த இக்கட்டான சூழலில் நமன் தீருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, ஆட்டத்தை நிதானமாகத் தொடங்கினார். நமன் தீர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 15 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் திலக் வர்மா 22 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், அதன் பிறகுதான் அந்த 'திலக் வர்மா புயல்' அகமதாபாத்தை தாக்கியது.
23 பந்துகளில் 82 ரன்கள்
அடுத்த 23 பந்துகளில் மட்டும் 82 ரன்களைச் சேர்த்த திலக் வர்மா, குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார். மொத்தம் 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 7 இமாலய சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
சாதனைப் பட்டியலில் திலக்
இந்தச் சதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக (45 பந்து) சதமடித்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையைத் திலக் வர்மா சமன் செய்துள்ளார். மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகச் சதமடித்த இரண்டாவது மும்பை வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதை செய்த முதல் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார்.
துள்ளிக் குதித்த ஹர்திக் பாண்டியா
திலக் வர்மா கடைசிப் பந்தில் சதமடித்ததும், பெவிலியனில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா உற்சாகத்தில் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திலக் வர்மா தனது ஹெல்மெட்டைக் கழற்றி வைத்துவிட்டு, நன்றி தெரிவித்து உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டாடினார். குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார்.


Click it and Unblock the Notifications