'எனக்கு அடிபடும்' என கதறிய 10 வயது சிறுவன்.. இழுத்துச் சென்ற தந்தை.. வைபவ் சூர்யவன்ஷியால் வந்த வினை
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இவரது வெற்றி, இளம் கிரிக்கெட் வீரர்கள் மீதான பெற்றோர் அழுத்தத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு தந்தை தனது மகனை வற்புறுத்தி, பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குழந்தைப் பாதுகாப்பு மற்றும் மனநல அழுத்தம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சுமார் 10 முதல் 11 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபட முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கிறான். ஆனால், மூத்த மற்றும் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அச்சத்துடன் கலங்கி அழுதுகொண்டிருக்கிறான். "நான் விளையாட மாட்டேன், பந்து பட்டு எனக்கு அடிபடும்" என்று அவன் தொடர்ந்து கதறுகிறான். ஆனாலும், அவனுடைய தந்தை அல்லது பயிற்சியாளர் என்று கருதப்படும் ஒருவர், அந்தச் சிறுவனின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக பயிற்சி களத்திற்குள் இழுத்துச் செல்கிறார்.

சிறுவன் கண்ணீருடன் வலைப்பயிற்சி களத்திற்குள் இழுத்துச் செல்லப்படுவதைப் பதிவுசெய்து வீடியோ முடிவடைகிறது. இந்தச் சம்பவம் இணையத்தில் இருவேறு துருவங்களில் விவாதங்களைத் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர், இவ்வளவு சிறிய வயதில் குழந்தைகளை மூத்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தாலும், இதனால் பலத்த காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுவனின் இயல்பான அச்சத்தைப் போக்காமல், இப்படி வற்புறுத்துவது தவறான அணுகுமுறை என்றும் இந்தத் தரப்பினர் வாதிடுகின்றனர். வைபவ் சூர்யவன்ஷியைப் போலவே ஒரு சிறுவன் இளம் வயதிலேயே பெரிய பந்துவீச்சாளர்களைத் தைரியமாகச் சந்தித்து சிக்ஸர் அடிக்கிறான் என்பதால், எல்லோராலும் அவ்வாறு செய்ய முடியாது என அவர்கள் விமர்சிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறமையும் மனநிலையும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினரோ, நடப்பு ஐபிஎல் தொடரில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார் என்றால், அதற்கு அவருடைய அசுரத்தனமான துணிச்சல் தான் முக்கியக் காரணம். எனவே, இளம் வயதிலேயே அச்சத்தைப் போக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்று கூறி, அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.
ஒரு கிரிக்கெட் வீரரை எப்படி உருவாக்குவது என்பது பயிற்சியாளர்களுக்கு தனிப்பட்ட அணுகுமுறையாக இருக்கலாம். இருப்பினும், சிறுவர்களின் பாதுகாப்பும் அவர்களுடைய மனநலமும் இங்கு கேள்விக் குறியாகியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான வளர்ச்சி கிரிக்கெட் உலகிற்கு வரம்தான். ஆனால் மறைமுகமாக அது மற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற எதிர்பார்ப்புகளையும் அழுத்தத்தையும் திணித்துள்ளது என்பதே தற்போதைய கள எதார்த்தம்.


Click it and Unblock the Notifications
