சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி குறித்து இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வருண் சக்கரவர்த்தியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை ரோஹித் சர்மா துவம்சம் செய்தார். இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "வருண் சக்கரவர்த்தி பந்தை லெக்-ஸ்பின் செய்து பேட்ஸ்மேன்களுக்கு வெளியே கொண்டு செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர் கடும் சிரமங்களைச் சந்திப்பார். எப்போதும் கூக்ளி பந்துகளை மட்டுமே வீசிக் கொண்டிருந்தால் இனி வேலைக்கு ஆகாது. உங்களது மிஸ்டரி எல்லாம் இப்போ ஹிஸ்டரி ஆகிவிட்டது" என்று நேரடியாகவே கலாய்த்துள்ளார்.

பவர் பிளே ஓவர்களில் வருண் சக்கரவர்த்திக்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஓவரிலேயே ரோஹித் சர்மா 15 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ரோஹித் அடித்த அடியில் வருணின் தன்னம்பிக்கை முற்றிலுமாகச் சரிந்துவிட்டதாகவும், அதன் பிறகு அவர் பயத்தில் பந்துகளை வேகமாக வீசத் தொடங்கிவிட்டதாகவும் ஸ்ரீகாந்த் சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் போட்டியில் ரோஹித் 78 ரன்கள் குவித்து, மும்பை அணி 13 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்று வந்த ராசியில்லா சாதனையை உடைக்க உதவினார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்தி லீக் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், முக்கியமான கடைசி 5 போட்டிகளில் மிகவும் மோசமாகப் பந்துவீசினார். அந்தப் போட்டிகளில் அவரது எகானமி 12 ஆகவும், சராசரி 45 ஆகவும் இருந்தது. பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், வருண் சக்கரவர்த்தியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்று ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார். 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் பந்துவீசாத நிலையில், வருண் சக்கரவர்த்தியும் ரன்களை வாரி வழங்கியது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.