IPL 2026: ஒரே போட்டியில் 3 பிரம்மாண்ட உலக சாதனைகளை உடைத்த விராட் கோலி.. சிக்ஸர், ஃபோர் ரெக்கார்டு
பெங்களூர்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி யாரும் எளிதில் தொட முடியாத 3 இமாலய உலக சாதனைகளை ஒரே நாளில் படைத்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சொந்த மண்ணில் நடைபெறும் டி20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை கோலி படைத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆர்சிபி அணி சேஸிங் செய்த போது, இன்னிங்ஸின் 10வது ஓவரில் இந்த சாதனையை அவர் எட்டினார். இந்தியாவில் மட்டும் அவர் 291 டி20 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா இந்தியாவில் 8563 ரன்கள் எடுத்துள்ளார்.

அடுத்ததாக, ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி தட்டிச் சென்றார். ஆட்டத்தின் 2வது ஓவரை ககிசோ ரபாடா வீசிய போது பவுண்டரி அடித்த கோலி இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 768 பவுண்டரிகளுடன் உள்ளார்.
இதோடு நிற்காமல், ரஷித் கான் வீசிய 8வது ஓவரில் பிரம்மாண்ட சிக்சர் விளாசிய கோலி, ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 300 சிக்சர்களை அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்றையும் எழுதினார். ஆர்சிபி அணிக்காக மட்டுமே தனது முழு ஐபிஎல் பயணத்தையும் தொடரும் அவர் இந்த முத்திரை பதித்துள்ளார்.
விராட் கோலி படைத்த முக்கிய சாதனைகளின் பட்டியல்:
- ஒரே நாட்டில் (இந்தியா) 10000 டி20 ரன்களைக் குவித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர்.
- ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் பேட்ஸ்மேன்.
- ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக (ஆர்சிபி) 300 சிக்சர்களை பறக்கவிட்ட முதல் வீரர்.
- ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 300 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் (கிரிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக).
ஆர்சிபி அணியை வெளுத்து வாங்கிய சாய் சுதர்சன், ஹோல்டர்: 206 ரன்கள் இலக்கை எட்டுமா பெங்களூரு?
இந்தப் போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206 ரன்கள் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications