IPL 2027: மும்பை அணிக்கு புதிய பயிற்சியாளராக பொலார்ட் தான் வரனும்.. முன்னாள் கோட்ச் கருத்து
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பேமண்ட், மஹேலா ஜெயவர்த்தனே தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய செய்தி தமக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பொறுப்பை ஏற்க கீரன் பொலார்ட் சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இரண்டாவது முறை பணியாற்றி வந்த ஜெயவர்த்தனே சமீபத்தில் பதவியிலிருந்து விலகினார். 2017 முதல் 2022 வரையிலான தனது முதல் காலகட்டத்தில் அணிக்கு மூன்று பட்டங்களைப் பெற்றுத் தந்த அவர் விலகியது குறித்துப் பேசிய பேமண்ட், இந்த மாற்றத்தை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், ஜெயவர்த்தனே இந்திய வீரர்களின் வளர்ச்சிக்கு மிகவும் தீவிரமாகப் பணியாற்றியவர் என்றும் கூறினார்.

அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் குறித்துப் பேசிய பேமண்ட், "பொலார்ட்டை தவிர வேறு யார் இந்தப் பொறுப்பை ஏற்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தயாராக இருந்தால், அந்தப் பொறுப்பை அவருக்கு வழங்குவதே சரியானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே செயல்படும் அவர், பேட்டிங் பயிற்சியாளராக தன் பயணத்தைத் தொடங்கி, ஐபிஎல் கிரிக்கெட் குறித்த சிறந்த அனுபவத்தையும் அறிவையும் பெற்றுள்ளார்" என்று தெரிவித்தார்.
டிசம்பர் 16 அன்று கோவாவில் நடைபெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்பாக, வீரர்களைத் தக்க வைப்பதற்கான கெடு முடிவதற்குள் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும்.
இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநராக இருந்த முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான், ஸ்டீபன் பிளெமிங்கின் விலகலுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். ஜாகீர் கானுக்கு இதுவே முதல் பெரிய பொறுப்பாகும். சென்னை அணியில் வீரர்களைத் தக்கவைப்பது மற்றும் ஏல உத்திகளை அமைப்பதில் ஜாகீர் கானின் அணுகுமுறை பெரிதும் உதவும் என்று பேமண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


