ஐபிஎல் தொடரில் பெரிய சிக்கல் இருக்கு.. அதை தீர்க்க இதை செய்யுங்க.. கவாஸ்கர் அட்வைஸ்
மும்பை: ஐபிஎல் அணிகளில் உள்ளூர் வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், பெரும்பாலான வீரர்கள் இந்தியர்களாகவே உள்ளனர்.
இந்த நிலையில், உள்ளூர் பயிற்சியாளர்கள் தொடர்பு மற்றும் மொழிச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவார்கள் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களே அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.

ஸ்டீபன் பிளெமிங் 5 பட்டங்களையும், மஹேலா ஜெயவர்தனே 3 பட்டங்களையும் வென்று முன்னணியில் உள்ளனர். தவிர, ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளரான ஜிம்பாப்வேயின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆண்டி பிளவர் சமீபத்தில் வெற்றி கண்டுள்ளார்.
ஐபிஎல் அணிகளில் இந்திய பயிற்சியாளர்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், "ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் இந்திய வீரர்களே அதிகமாக உள்ளனர். ஏனெனில் பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். இந்திய வீரர்களில் பலர் நாட்டின் உள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். அங்கு ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுவதில்லை. அதனால், வெளிநாட்டுப் பயிற்சியாளர் பேசும்போது, அவர் சொல்வதில் பெரும்பகுதி இந்த இளம் வீரர்களுக்கு புரிவதில்லை."
"எனவே, வெளிநாட்டு பயிற்சியாளர் கூறுவதை மொழிபெயர்த்துத் தெரிவிக்க ஒரு இந்தியரை உதவிப் பயிற்சியாளராக நியமிப்பது முற்றிலும் சரியான முடிவாக இருக்கும். தங்கள் சொந்த மொழியில் பேசக்கூடிய, தங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு இந்திய பயிற்சியாளரை அணுகுவது இளம் வீரர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும், ஐபிஎல் போட்டிகளில் கூடும் பெரும் கூட்டத்தின் முன் விளையாடும் போது ஏற்படும் பதற்றத்தை போக்கவும் இது உதவும்" என்றார்.
"எனது நினைவுக்கு வரும் பெயர்களில் பிரவீன் குமாரும் ஒருவர். அவர் அபாரமாக ஸ்விங் செய்யக்கூடியவர். பியூஷ் சாவ்லாவும் திறமையான பந்துவீச்சாளர், 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவர். வயது ஒரு தடையல்ல என்றால், பல்விந்தர் சிங் சாந்துவும் சிறந்த தேர்வு. அவருக்கு ஸ்விங் பந்துவீச்சு மட்டுமின்றி ஆட்டத்தைப் பற்றியும் ஆழமான அறிவு உள்ளது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இந்திய உதவிப் பயிற்சியாளர்கள் முக்கியப் பங்கு வகித்தாலும், 2024-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கோப்பையை வென்ற சந்திரகாந்த் பண்டிட் தான் கடைசியாகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ஆவார்.


Click it and Unblock the Notifications


