IPL 2024 : எத்தனை கோடி போனாலும் பரவாயில்லை.. 2 இங்கிலாந்து வீரர்களுக்கு குறி வைத்த ஐபிஎல் அணிகள்
துபாய் : இங்கிலாந்து வீரர்கள் பிலிப்ஸ் சால்ட் மற்றும் ஹாரி ப்ரூக் தான் 2024 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகப் போகும் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கணித்து இருக்கிறார்கள். சரியாக ஏலத்துக்கு முன் அவர்கள் ஆடிய ஆட்டம் ஐபிஎல் அணிகள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தும் என்பதே அதற்கு காரணம்.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட், 2023 உலகக்கோப்பையை பேட்டிங்கில் தனி ஆளாக வென்று கொடுத்ததில் இருந்தே அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் பெரிய விலை கிடைக்கும் என்ற கணிப்பு இருந்து வரும் நிலையில், அவருக்கு இணையாக இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் மற்றும் ஃபினிஷர் ஹாரி ப்ரூக்-கிற்கும் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

ஹாரி ப்ரூக்கின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக உள்ளது. பில் சால்ட்டின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 152 ஆக உள்ளது. இருவருமே சில நாட்கள் முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி தேடித் தந்து இருந்தனர்.
அந்தப் போட்டியில் 223 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸிங் செய்த போது பிலிப்ஸ் சால்ட் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை எனும் போது ஹாரி ப்ரூக் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து வெற்றி பெற வைத்தார். அவர் 7 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். சரியாக ஐபிஎல் ஏலத்திற்கு முன் அதிரடி ஆட்டம் ஆடி தங்களுக்கான விளம்பரத்தை தேடிக் கொண்டார்கள் என அப்போதே கிரிக்கெட் வட்டாரம் கூறத் துவங்கியது.
அதன் காரணமாக பிலிப்ஸ் சால்ட், ஹாரி ப்ரூக் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஹாரி ப்ரூக்கின் அடிப்படை விலை 2 கோடியாக உள்ளது. பிலிப்ஸ் சால்ட்டின் விலை அடிப்படை விலை 1.50 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications