அபுதாபி: 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் சாதனை மேல் சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரரான மிட்ஷெல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூபாய் 24.75 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுதான் ஐபிஎல் போட்டிக்காக ஒரு வீரர் அதிக விலைக்கு ஏலம் கூறப்பட்டது என்ற சாதனை இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அசால்ட்டாக கடந்தார்.
இவரை கொல்கத்தா அணி ரூபாய் 25.20 கோடிக்கு வாங்கியது. அதேபோல் கொல்கத்தா அணி, கடந்த சீசன் வரை சென்னை அணியில் விளையாடிக் கொண்டு இருந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனாவை ரூபாய் 18 கோடிகளுக்கு வாங்கியது. இதில் கேமரூன் கிரீன் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் இந்த அளவுக்கு ஏலம் போனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதற்கு முன்னர் அவர் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: அனைவரும் அவரது விலை குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட சரிபாதி அணிகளுடன் போட்டி போட்டு ஒரு வீரரை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது. அதாவது இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத, உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா என்ற இரண்டு வீரர்களை சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்றால் இருவருமே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள்.
சாதனை: இதில் பிரஷாந்த் வீர் என்ற இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரை சென்னை அணி ரூபாய் 14.20 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல், கார்த்திக் சர்மா என்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை ரூபாய் 14.20 கோடிகளுக்கு வாங்கி உள்ளது. இவர்கள் இருவரையும் சென்னை அணி இந்த விலை கொடுத்து வாங்கி உள்ளதால், இருவரும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய வீரர்கள் என்ற பெருமையைப் பெற்றனர். இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் இது புது சாதனை. இதனை ஏலத்தில் கேமரூன் கிரீன் படைத்த சாதனையை விட பெரிய சாதனை என்று கிரிக்கெட் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.