இந்திய அணிக்காக ஆடிய தமிழக வீரர் விஜய் சங்கர் அன்கேப்ட் வீரரா?.. ஐபிஎல் ஏலத்தில் நடந்த ட்விஸ்ட்
மும்பை: 2026 ஐபிஎல் மினி ஏலம் நெருங்கும் வேளையில், வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விஜய் சங்கர் மற்றும் கரண் சர்மா ஆகியோர், "அன்கேப்ட்" (Uncapped - உள்ளூர் வீரர்கள்) பிரிவில் ஏலத்தில் களமிறங்கவுள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், பிசிசிஐ-யின் விதிகளின்படி இவர்கள் உள்ளூர் வீரர்களாகக் கருதப்படுவது அணிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி தோனியைத் தக்கவைப்பதற்காக, பிசிசிஐ ஒரு பழைய விதியைத் தூசி தட்டி எடுத்தது. அதன்படி, "ஒரு இந்திய வீரர் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) விளையாடாமல் இருந்தால், அவர் அன்கேப்ட் (Uncapped) வீரராகக் கருதப்படுவார்."

இந்த விதியைப் பயன்படுத்தித் தோனி குறைந்த விலையில் தக்கவைக்கப்பட்டார். இப்போது அதே விதியைப் பயன்படுத்தி விஜய் சங்கர் மற்றும் கரண் சர்மா ஆகியோர் ஏலத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
விஜய் சங்கர்
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், 2019 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவர் இப்போது 'அன்கேப்ட்' வீரராகிவிட்டார்.
சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு வீரர், வெறும் ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வருகிறார் என்பது ஐபிஎல் அணிகளுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அவரை மாற்று வீரராக சில அணிகள் வாங்கக் கூடும்.
கரண் சர்மா
38 வயதான அனுபவச் சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா, கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இவரும் இயல்பாகவே அன்கேப்ட் பிரிவில் வருகிறார். மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற அணிகளுக்காக ஆடிய இவரின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அணிகளுக்கு என்ன லாபம்?
வழக்கமாக சர்வதேச போட்டியில் ஆடிய வீரர்களின் (Capped Players) அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ.75 லட்சத்தில் தொடங்கும். ஆனால், விஜய் சங்கர் மற்றும் கரண் சர்மா அன்கேப்ட் பிரிவில் வருவதால், அவர்களை மிகக்குறைந்த விலையில் ஏலத்தில் எடுக்க முடியும்.
பட்ஜெட் குறைவாக உள்ள அணிகள், அனுபவம் வாய்ந்த இவர்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தங்கள் அணியின் மாற்று வீரர்கள் பட்டியலை சம பலத்துடன் வைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். டிசம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள ஏலத்தில் இவர்களுக்கு போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications