IPL Auction: சைலண்ட் டை-பிரேக்கர் என்றால் என்ன? பொல்லார்ட், ஜடேஜா வாங்கப்பட்டதே இந்த விதியால் தான்
அபுதாபி: 2026 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் உள்ள எதிஹாட் அரேனாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அணிகள் அனைத்தும் தங்களது வியூகங்களுடன் தயாராக உள்ள நிலையில், ஐபிஎல் ஏலத்தில் இருக்கும் ஒரு விசித்திரமான, பலருக்கும் தெரியாத ஒரு விதிமுறை குறித்து இப்போது பார்ப்போம். அதுதான் "சைலண்ட் டை-பிரேக்கர்".
வழக்கமாக ஒரு வீரருக்கான ஏலத்தொகை உயர்ந்து கொண்டே செல்லும். ஆனால், சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட உச்சவரம்புத் தொகையை இரண்டு அணிகளும் எட்டிவிடும் சூழல் வரலாம் அல்லது ஒரு அணியிடம் இருக்கும் மீதமுள்ள மொத்த தொகையையும் ஒரு வீரருக்குக் கேட்கும் சூழல் வரலாம்.
இப்படி இரண்டு அணிகளும் சமமான தொகையில் வந்து நிற்கும் போது, வெற்றியாளரைத் தீர்மானிக்க பிசிசிஐ பயன்படுத்தும் உத்திதான் இந்த "சைலண்ட் டை-பிரேக்கர்".

அது என்ன "சைலண்ட் டை-பிரேக்கர்"?
இந்தச் சூழலில், சமமான தொகையைக் கேட்ட அந்த இரண்டு அணிகளிடமும் ஒரு "ரகசியக் கடிதம்" கொடுக்கப்படும்.அந்த இரண்டு அணிகளும், ஏலத்தில் கேட்கப்பட்ட தொகையைத் தாண்டி, அந்த வீரருக்காக கூடுதலாக எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை அந்தத் தாளில் எழுதி, மூடிய கவரில் கொடுக்க வேண்டும்.
இதில் யார் அதிகத் தொகையை எழுதியிருக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த வீரர் சொந்தமாவார். இந்த "கூடுதல் தொகை" வீரருக்குச் செல்லாது. அது நேரடியாக பிசிசிஐ-க்குச் செல்லும். மேலும், இந்தக் கூடுதல் தொகை அணியின் ஏலத் தொகையில் (Purse Value) இருந்து கழிக்கப்படாது. இது ஒரு கூடுதல் கட்டணம் போன்றது.
வரலாற்றில் நடந்த சம்பவங்கள்
இந்த விதிமுறை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை எப்போது என்று பார்க்கலாம்.
2010 - கீரான் பொல்லார்ட்: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பொல்லார்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச தொகையைக் கேட்டன. இறுதியில் "சைலண்ட் டை-பிரேக்கர்" மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி மிக அதிகத் தொகையை ரகசியமாக எழுதிக் கொடுத்து பொல்லார்டை தூக்கியது.
2010 - ஷேன் பாண்ட்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டிற்கும் இதே முறை கடைபிடிக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை வென்றது.
2012 - ரவீந்திர ஜடேஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் (இப்போதைய சன்ரைசர்ஸ்) அணிகள் ஜடேஜாவுக்காக மோதின. 2 மில்லியன் டாலர் என்ற உச்சவரம்பை இரு அணிகளும் தொட்டன. இறுதியில் ரகசிய ஏலம் மூலம் சிஎஸ்கே ஜடேஜாவைத் தட்டிச் சென்றது. 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பட்ஜெட் குறைவான அணிகள் மோதுகையில், இது போன்ற சுவாரஸ்யமான சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications