டோணி புயல் வேக ஆட்டம் – வீழந்தது பஞ்சாப் – அரை இறுதியில் சென்னை

தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகவும் திரில்லான போட்டி என்ற பெயரைப் பெற்று விட்டது. வாழ்வா, சாவா நிலையில் இந்தப் போட்டியை சந்தித்தது சென்னை. அதேசமயம், இந்தப் போட்டியின் முடிவால் பஞ்சாப் அணிக்கு எந்த நல்லதும் நடக்காது என்ற நிலை.
இதனால் சென்னை அணி நேற்றைய போட்டியில் வெல்லும் வேகத்துடன் அதைச் சந்தித்தது. ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் நேற்று ஏமாற்றி விட்டனர்.
அவர்களது பந்து வீச்சை அடித்து நொறுக்கிய பஞ்சாப் அணி வீரர்கள் மஹிளா ஜெயவர்த்தனே, மார்ஷ், சங்கக்காரா, இர்பான் பதான் ஆகியோர் ரன்களைக் குவித்து விட்டனர்.
குறிப்பாக மார்ஷ் அபாரமாக ஆடி 88 ரன்களைக் குவித்தார். 8 பந்துகளில் 21 ரன்களைக் குவித்தார் ஜெயவர்த்தனே. இர்பான் பதான் 27 பந்துகளில் 44 ரன்களைக் குவிக்க, 24 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்தார் சங்கக்காரா.
இதன் காரணமாக 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 192 ரன்களை குவித்து விட்டது பஞ்சாப்.
கடுமையான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில், ஹெய்டன் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் முரளி விஜய் 13 ரன்களிலும் வீழ்ந்தனர்.
அதேசமயம், ரெய்னாவும், பத்ரிநாத்தும் இணைந்து வான வேடிக்கை காட்டினர். படு வேகமாக ஆடிய ரெய்னா 27 பந்துகளில் 46 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அணிக்கு மீண்டும் தடுமாற்றம் ஏற்பட்டது.
ஆனால் பத்ரிநாத் நங்கூரம் போல நச்சென்று நின்று ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். சிறப்பாக ஆடிய பத்ரி, 36 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். இது இவர் இந்த்த் தொடரில் எடுத்த ஐந்தாவது அரை சதமாகும்.
பத்ரிநாத் ஆட்டமிழந்தபோது அணி நெருக்கடியான நிலையில் இருந்தது. இருப்பினும் கேப்டன் டோணியும், அல்பி மார்க்கலும் இணைந்து நிலைத்து நின்று அட்டகாசமாக ஆடினர்.
குறிப்பாக டோணியின் ஆட்டத்தில் புயல் வேகம் காணப்பட்டது. அதிலும் கடைசி நான்கு ஓவர்களில் அவர் விஸ்வரூபம் காட்டினார். பட்டாசாகப் பொறிந்த டோணி கடைசி ஓவரின்போது வெளுத்துக் கட்டி விட்டார்
இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாசி அணியை வெற்றி பெற வைத்த அனைவரையும் திகைக்க வைத்து விட்டார்.
2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 195 ரன்களைக் குவித்து சென்னை வெற்றி பெற்றது.
மார்க்கல், 8 பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியின் பங்கு ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 54 ரன்கள்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. ஆட்ட நாயகனாக டோணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று ஆடிய சென்னை அணியில் பேட்டிங் வரிசை அபாரமாக இருந்தது. முன்பு அடிக்கடி வீரர்களின் வரிசையை மாற்றி வந்தார் டோணி. இதனால் குழப்பமாகி வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் சென்னை தோல்வியைத் தழுவும்படி நேரிட்டது. ஆனால் நேற்றைய பேட்டிங் வரிசை சிறப்பானதாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸை வருகிற வியாழக்கிழமை சந்திக்கிறது. இன்னொரு அரை இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications