டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் டாப் 2வது இடம் கிடைக்கும். இதுவே தோல்வியை தழுவினால், மற்ற அணிகளின் தயவு தேவை இருக்கும்.
டெல்லியில் வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் போக போக தோய்வாக மாற வாய்ப்பு இருப்பதால், தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தோனி கூறினார்.

வழக்கம் போல், இன்றைய ஆட்டத்தில் தோனி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மேலும் பேசிய தோனி, முதல் போட்டியிலிருந்து வெற்றி பெற தான் முயற்சி செய்து வருகிறோம். எங்கள் அணியில் சமநிலை எப்போதும் இருக்கிறது.இதனால் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய தேவையில்லை.
இந்த சீசனில் எங்களுக்கு நல்ல ஆட்டமும் இருந்திருக்கிறது. மோசமான ஆட்டமும் அமைந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் பாடத்தை கற்று கொண்டு விளையாட வேண்டும். இளைஞர்களிடமிருந்து இதை தான் எதிர்பார்க்கிறேன் என்று தோனி கூறினார்.
தனது 100வது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய வார்னர் தாங்களும் பேட்டிங் செய்ய தான் இருந்தோம் என்று கூறினார். இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவுக்கு பதில் சாக்கரியாவும், லலித் யாதவும் விளையாட உள்ளதாக கூறிய வார்னர், தர்மசாலா வெற்றியை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் புதியதாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.