ராய்ப்பூர்: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர் அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் 56 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.

அதேநேரத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறிய யுவராஜ் சிங் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரத்வெயிட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது.டெல்லி தரப்பில் பிரத்வெயிட் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க ஆட்டகாரரான டி காக் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் பந்த் மற்றும் கருண் நாயர் இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்குமார் வீசிய அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி டெல்லியின் வெற்றி கனவை நினைவாக்கினார் கருண் நாயர். இதனால் டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த கருண் நாயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.