அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் அணிகள் மோதும் ஆட்டம் மழை காரணமாக திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திரண்டனர்.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு யாருமே எதிர்பாராத வகையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சுமார் போட்டி 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு 9 மணிக்கு மைதானத்தில் நடுவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் எவ்வித ஓவரும் குறையாமல் போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் மீண்டும் மழை மேகங்கள் திரண்டு ஒரு காட்டு காட்டியது. இதனால் மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட தார்பாய்கள் மீண்டும் போடப்பட்டது. மழை இப்போது நின்று விடும் அப்போது நின்றுவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்தி இரவு 10:55 மணி அளவில் வந்தது.
மைதானத்தின் தன்மை மிகவும் மோசமானதாக இருப்பதால் போட்டியை திட்டமிட்டபடி 12:06க்குள் தொடங்க முடியாது என மைதான ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் வேறு வழி இன்றி ஐபிஎல் இறுதிப் போட்டியை ரிசர்வ் டே ஆன திங்கட்கிழமை நடத்தலாம் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அகமதாபாத்திற்கு சென்றுள்ள ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பெரும் அளவில் அகமதாபாத்திற்கு ரசிகர்கள் சென்று இருக்கிறார்கள்.
போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை காலை ஊர் திரும்பலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது மிகவும் சோகமான செய்தி வந்திருக்கிறது. இதனை அடுத்து தங்களுடைய பயண நேரம், ஹோட்டல் டிக்கெட் என அனைத்தையும் மாற்ற வேண்டிய சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளையும் அகமதாபாத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி திட்டமிட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.