இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்? குஜராத் அணி கையில் கோப்பை இருக்கும்.. பிசிசிஐ கொடுத்த ட்விஸ்ட்!
அகமதாபாத்: குஜராத் - சென்னை அணிகள் விளையாடும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கனமழை காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்தால் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு குஜராத் - சென்னை அணிகள் முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த சூழலில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிலையில், சில நிமிடங்கள் மட்டும் கேப் விட்டு தொடர்ந்து பெய்தது. இதனால் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

இரவு 11 மணி வரை காத்திருந்த நடுவர்கள், குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ரிசர்வ் நாளில் நடக்கும் என்று அறிவித்தனர். ஓவர்களை குறைக்காமல் ஆட்டத்தை ரிசர்வ் நாளில் நடத்த பிசிசிஐ எடுத்த முடிவு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்று மாலையிலும் அகமதாபாத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இன்றும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் அணியின் கைகளில் ஐபிஎல் கோப்பை ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத் அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மீண்டும் அகமதாபாத்தில் மழை வரக் கூடாது என்று இப்போதே வேண்டுதலை தொடங்கியுள்ளனர். இருப்பினும் இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டால் குறைந்த ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தவும் ஐபிஎல் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.



Click it and Unblock the Notifications